செய்திகள்
காங்கிரஸ்

புதுவை காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததின் பின்னணியில் என்.ஆர்.காங்கிரஸ்

Published On 2021-03-02 06:50 GMT   |   Update On 2021-03-02 06:50 GMT
புதுவையில் ஆட்சி கவிழ்ப்புக்கு பா.ஜனதா தான் காரணம் என காங்கிரசார் நினைத்தனர். ஆனால், ஆட்சி கவிழ்ப்பு பின்னணியில் என்.ஆர்.காங்கிரசும் இருப்பது ஆட்சியை இழந்த பிறகே காங்கிரசாருக்கு தெரிய வந்துள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்ததால் கவிழ்ந்தது.

காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் கட்சியை விட்டு விலகினர். ஆனால், அப்போது காங்கிரஸ் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை.

ஆனால் அடுத்து அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், அவரை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், லட்சுமிநாராயணன், தி.மு.க எம்.எல்.ஏ. வெங்கடேசன் ராஜினாமா செய்ததால் தான் மெஜாரிட்டி இழந்தது.

இதில், ஜான்குமார், வெங்கடேசன் பா.ஜனதாவில் ஐக்கியமாகி விட்டனர். ஆனால், முன்னாள் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் என்.ஆர்.காங்கிரசில் இணைய உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கிரண்பேடியை எதிர்ப்பதில் பிரதானமாக செயல்பட்டார். தனது தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தாலும், அங்கு தனது ஆதரவாளரை காங்கிரஸ் சார்பில் நிறுத்துவார் என எதிர்பார்த்தனர்.

முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி கூட ஏனாமில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால், அமைச்சர் பதவியை மட்டும் ராஜினாமா செய்திருந்த மல்லாடி திடீரென எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இது காங்கிரசாருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஆனாலும் காங்கிரசில் தொடர்வார் என அவர்கள் நம்பினர்.

இதனால் ராகுல் வருகையின் போது அமைக்கப்பட்ட விளம்பர பேனர்களில் அவரின் படம் இடம் பெற்றிருந்தது. அவர் திடீரென அந்தர் பல்டி அடித்து என்.ஆர்.காங்கிரஸ் பக்கம் செல்ல இருப்பது காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் லட்சுமி நாராயணனும் நாளை என்.ஆர்.காங்கிரசில் இணைவது உள்ளது உறுதியாகி உள்ளது. இவர் நாராயணசாமி மீது கடும் அதிருப்தியில் இருந்தார். இருப்பினும் அவர் காங்கிரசில் தொடர்வார் என எதிர்பார்த்தனர்.

ராகுல் பங்கேற்ற மீனவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரை தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் வரவேற்றார். ரோடியர் மில் திடலில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்திலும் மேடைக்கு செல்லாவிட்டாலும் கீழே கட்சி நிர்வாகிகளின் வரிசையில் அமர்ந்திருந்தார்.

அவரும்கூட என்.ஆர்.காங்கிரசுக்கு செல்வது காங்கிரசை உருக்குலைத்துள்ளது. இதுவரை ஆட்சி கவிழ்ப்புக்கு பா.ஜனதா தான் காரணம் என காங்கிரசார் நினைத்தனர். ஆனால், ஆட்சி கவிழ்ப்பு பின்னணியில் என்.ஆர்.காங்கிரசும் இருப்பது ஆட்சியை இழந்த பிறகே காங்கிரசாருக்கு தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News