செய்திகள்
டார்ஜிலிங் பொம்மை ரெயில்

டார்ஜிலிங்கில் பொம்மை ரெயிலில் செல்பி எடுக்க முயன்றவர் தவறி விழுந்து பலி

Published On 2019-10-10 12:03 GMT   |   Update On 2019-10-10 12:03 GMT
டார்ஜிலிங்கில் பொம்மை ரெயிலில் இருந்து செல்பி எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணி தவறி விழுந்து பலியாகின சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டார்ஜிலிங்:

டார்ஜிலிங்கின் பொம்மை ரயில் எனப்படும் சிறு வகை, பொழுதுபோக்கு மலை ரயில் சேவை பிரபலமானது. மேற்கு வங்க மாநிலத்தில்  1981ஆம் ஆண்டு இந்த மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த பொம்மை ரயில் சிலிகுரியில் இருந்து டார்ஜிலிங் வரையிலான 88  கிமீ தூரத்தை அடர்ந்த காட்டுப்பகுதிகள், தேயிலை தோட்டங்கள், பாலங்கள், குகைகளைக் கடந்து பயணம் செய்யும். 1999ஆம் ஆண்டு  ‘யுனெஸ்கோ’ அமைப்பின் உலகப் பாரம்பரிய அந்தஸ்து பொம்மை ரயில் சேவைக்குக் கிடைத்தது.

எஞ்சின் பெட்டியை தவிர்த்து இருபெட்டிகளை மட்டுமே உடைய  இந்த பொம்மை ரெயிலில் பயணம் செய்ய அதிக அளவிலான  சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளி நகரின் ரிஷ்ரா பகுதியை சேர்ந்தவர் பிரதிப்  சக்சேனா. இவர் குடும்பத்துடன் டார்ஜிலிங் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். பிரதிப் தனது குடும்பத்துடன் நேற்று பொம்மை ரெயிலில்  பயணம் செய்துள்ளார்.  

படாசியா வளைவு பகுதியில் ரெயில் செல்லும் போது பிரதிப் வாயில் கதவு அருகே வந்து செல்பி எடுக்க முயன்றுள்ளார். ரெயிலில்  பயணம் செய்தவர்களும் ரெயில்வே ஊழியர்களும் அவரை எச்சரித்தனர். அதையும் மீறி செல்பி எடுத்துள்ளார். அப்போது வளைவுப்  பகுதியில் ரெயில் திரும்பும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து உடனடியாக பிரதிப் டார்ஜிலிங் மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.  

பலத்த காயங்கள் ஏற்பட்டதால் சிலிகுரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால்  சிலிகுரி செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.  சுற்றுலா சென்றபோது பொம்மை ரெயிலில் செல்பி எடுக்க முயன்றவர் கீழே விழுந்து பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News