செய்திகள்
மம்தா பானர்ஜி

5 நட்சத்திர ஓட்டலில் சமைத்ததை பழங்குடியினர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Published On 2020-11-24 04:07 GMT   |   Update On 2020-11-24 04:07 GMT
மேற்கு வங்காள சுற்றுப்பயணத்தின்போது, பழங்குடியினர் வீட்டில் அமித்ஷா சாப்பிட்ட உணவு, ஐந்து நட்சத்திர ஓட்டலில் சமைத்தது என்று மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தா :

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, நேற்று அம்மாநிலத்தில் உள்ள பங்குரா என்ற இடத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

சில நாட்களுக்கு முன்பு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இதே பங்குராவுக்கு வந்தார். ஒரு பழங்குடியின நபரின் வீட்டில் அவர் மதிய உணவு சாப்பிட்டார். அது வெறும் நாடகம்தான்.

அவர் வருவதற்கு முன்பு அந்த வீட்டில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டது.

அந்த குடும்பத்தினர் காய்கறிகள் நறுக்குவது போல் வீடியோ எடுக்கப்பட்டது. கொத்தமல்லி தழைகளை அரிந்தனர்.

ஆனால், இந்த காய்கறிகள் எதுவுமே அமித்ஷா சாப்பிடுவதற்கு பயன்படுத்தப்படவில்லை. அவர் பாஸ்மதி அரிசி உள்ளிட்ட உணவு பண்டங்களைத்தான் சாப்பிட்டதாக நான் பத்திரிகைகளில் பார்த்தேன். அவையெல்லாம் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் சமைக்கப்பட்டவை. இப்படியெல்லாம் அவர் செய்து வருகிறார்.

ஆனால், இங்கு நான் முன்கூட்டியே திட்டமிடாமல் வந்துள்ளேன். ஒரு கட்டிலில் அமர்ந்து, உள்ளூர் மக்களை சந்தித்து பேசினேன். அவர்களின் தேவைகளை கேட்டறிந்தேன்.

சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா சிலை என்று நினைத்து ஒரு சிலைக்கு அமித்ஷா மாலை அணிவித்துள்ளார். ஆனால், அது ஒரு வேட்டைக்காரரின் சிலை என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். இதுபோன்று அவமதிப்பதை ஏற்க முடியாது. அடுத்த ஆண்டில் இருந்து பிர்சா முண்டா பிறந்தநாளுக்கு அரசு விடுமுறை விடப்படும்.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.
Tags:    

Similar News