ஆன்மிகம்
கோட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது

கோட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது

Published On 2019-07-09 05:34 GMT   |   Update On 2019-07-09 05:34 GMT
ஆடிப்பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து மாரியம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை 22 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். தற்போது கோவிலில் ரூ.2½ கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் ஆடிப்பண்டிகையை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடந்தது. காலை 6 மணி முதல் 7 மணிக்குள் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபட்டனர்.

மேலும் பெண் பக்தர்கள் பலர் தங்கள் வேண்டுதலை நிறைவேற வேண்டி முகூர்த்தக்கால் கம்பத்துக்கு மஞ்சள் கயிறு கட்டினார்கள். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற 23-ந் தேதி கோவிலில் பூச்சாட்டுதல் விழா நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் பூச்சாட்டுதலுடன் ஆடிப்பண்டிகை தொடங்கும்.

கோட்டை மாரியம்மன் கோவிலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி சக்தி அழைப்பு நிகழ்ச்சியும், 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 3 நாட்கள் பொங்கல் வைத்து வழிபாடு, மாவிளக்கு ஊர்வலம், 13-ந் தேதி பால்குட ஊர்வலம், மகா அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
Tags:    

Similar News