செய்திகள்
விண்வெளி தொலைக்காட்சி

அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியை செலுத்தும் தேதியை அறிவித்தது நாசா

Published On 2021-09-08 17:19 GMT   |   Update On 2021-09-08 17:19 GMT
ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது இதற்கு முன்பு செலுத்தப்பட்ட தொலைநோக்கிகளைவிட அதிகளவு திறன் கொண்டது.
நியூயார்க்:

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, விண்வெளி ஆராய்ச்சிக்காக, 10 பில்லியன் டாலர் செலவில் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியை  உருவாக்கி உள்ளது. அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியாக கருதப்படும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை, வரும் டிசம்பர் 18ம் தேதி செலுத்தி விண்வெளியில் நிலைநிறுத்தப்படும் என நாசா தெரிவித்துள்ளது. பிரெஞ்சு கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்த தொலைநோக்கி, தற்போது கலிபோர்னியாவின் ரெடோண்டோ கடற்கரையில் உள்ள ஒப்பந்த நிறுவனமான, நார்த்ரோப் க்ரூம்மனின் ஆய்வுக்கூடத்தில்  வைக்கப்பட்டுள்ளது, விரைவில் அங்கிருந்து ஏவுதளத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

இந்த தொலைநோக்கியானது, ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மற்றும் 1990ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி போன்று இருந்தாலும் அவற்றைவிட அதிகளவு திறன் கொண்டது. விண்வெளியில் இருக்கும் அகச்சிவப்பு கதிர்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து பூமிக்கு அதன் முடிவுகளை அனுப்பும் திறன் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் தொலைதூரத்தில் இருக்கும் சிறிய கிரகங்களையும் நட்சத்திரக்கூட்டங்களையும் காணமுடியும். இதன் மூலம் விண்வெளியில் இருக்கும் பல புதிர்களுக்கு விடைகிடைக்கும் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News