செய்திகள்
கொலை

திருவனந்தபுரம் அருகே சொத்து தகராறில் காரை ஏற்றி மாமனாரை கொன்ற மருமகன்

Published On 2021-02-25 08:45 GMT   |   Update On 2021-02-25 08:45 GMT
சொத்து மற்றும் குடும்ப பிரச்சனைக்காக மாமனாரை மருமகனே காரை ஏற்றி கொன்ற சம்பவம் திருவனந்தபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிளிமானூர் பகுதியை சேர்ந்தவர் யாகியா(வயது75). இவரது மகளுக்கும், திருவனந்தபுரம் அருகே உள்ள மடக்கரா பகுதியை சேர்ந்த அப்துல்சலாம்(52) என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு அப்சல்(14) என்ற மகன் இருக்கின்றான்.

இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அப்துல்சலாமின் மனைவி தனது மகனுடன் தன்னுடைய தந்தை யாகியாவின் வீட்டில் வாழ்ந்து வந்தார்.

மேலும் கணவன்-மனைவி இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது விவாகரத்து வழக்கு கொட்டாரக்கரா குடும்ப நல கோர்ட்டில் நடந்துவந்தது. அந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

அது அப்துல் சலாமின் மனைவிக்கு சாதகமாக வருவதுபோல் இருந்திருக்கிறது. இதையடுத்து அப்துல் சலாம் தனது சொத்துக்களை தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயருக்கு எழுதிவைக்க முடிவெடுத்ததாக தெரிகிறது.

அவரது திட்டத்தை தெரிந்து கொண்ட அவருடைய மனைவி, அப்துல்சலாம் சொத்துக்களை உறவினர்களின் பெயருக்கு மாற்றாமல் இருக்க கோர்ட்டில் தடையாணை வாங்கினார். இதையடுத்து அந்த தடை ஆணையை வழங்குவதற்காக அப்துல்சலாமின் சகோதரி சாபியாவின் வீட்டிற்கு கோர்ட்டு ஊழியர் சென்றார்.

அப்போது அப்துல் சலாமின் மாமனார் யாகியா, பேரன் அப்சலுடன் சாபியாவின் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு அப்துல்சலாம் காரில் வந்தார். அவர் மாமனார் மீது காரால் மோதினார். இதில் மாமானார் யாகியா மற்றும் உடன் நின்ற மகன் அப்சல் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி யாகியா பரிதாபமாக இறந்தார். சிறுவன் அப்சல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

முதலில் இந்த சம்பவம் விபத்தாகவே கருதப்பட்டது. அப்துல்சலாமிடம் விசாரணை நடத்தியபோது, அவரும் அது ஒரு விபத்து என்றே கூறினார். இதனால் அந்த சம்பவத்தை விபத்து என்றே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சிறுவன் அப்சல் அளித்த வாக்குமூலத்தில், தனது தந்தை காரை வேண்டுமென்றே மோதவிட்டதாக கூறினார். அதன்பேரில் அப்துல் சலாமிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மாமனாரை காரை ஏற்றிக்கொன்றதை அப்துல்சலாம் ஒப்புக்கொண்டார்.

சொத்து மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக மாமனாரை காரை ஏற்றி கொன்றுவிட்டதாக அவர் கூறினார். இதையடுத்து விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. அப்துல் சலாமை போலீசார் கைது செய்தனர்.

சொத்து மற்றும் குடும்ப பிரச்சனைக்காக மாமனாரை மருமகனே காரை ஏற்றி கொன்ற சம்பவம் திருவனந்தபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News