செய்திகள்
அமராவதி அணை.

தொடர் மழையால் உடுமலை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு

Published On 2021-10-18 07:46 GMT   |   Update On 2021-10-18 07:46 GMT
உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த  சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. திருமூர்த்தி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாலாறு மூலம் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு 953 கனஅடி நீர்வரத்து உள்ளது. 

அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 1044 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதேப்போல் உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு  பகுதியில் மழை பெய்து வருவதால் கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 900 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து உடுமலை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், தொடர் மழையால் நெல் மற்றும் தக்காளி அறுவடைப்பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. 

அதே நேரம் கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர் சாகுபடிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தொடர் மழை நல்ல பலனை தந்துள்ளது என்றனர்.  
Tags:    

Similar News