செய்திகள்
கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி கிடந்த காட்சி.

திருவண்ணாமலை முழு ஊரடங்கால் வெறிச்சோடியது

Published On 2021-05-03 18:16 GMT   |   Update On 2021-05-03 18:16 GMT
முழு ஊரடங்கால் திருவண்ணாமலை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவண்ணாமலை:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 2-வது முறையாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கில் பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு நேர ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டது. அதன்படி நேற்று திருவண்ணாமலை மாவட்டத்திலும் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி திருவண்ணாமலையில் பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் திருவண்ணாமலை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தேவையின்றி வெளியில் வருபவர்களை போலீசார் எச்சரித்து வீட்டில் இருக்குமாறு அனுப்பி வைத்தனர். சில இடங்களில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் நடந்து முடிந்த வாக்குப்பதிவையொட்டி நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனால் திருவண்ணாமலை சில பகுதிகளில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றனர்.

முழு ஊரடங்களில் பொது மக்கள் வீ்ட்டிலேயே முடங்கினர்.

கண்ணமங்கலம், படவேடு, சந்தவாசல் ஆகிய பகுதிகளில் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்துச் சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லை. வாகனப் போக்குவரத்தும் இல்லாததால் சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

கண்ணமங்கலம், படவேடு, சந்தவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. அந்தப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்பு எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் ரேணுகாம்பாள் கோவில் முன்பு பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கோவில் எதிரே உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

கீழ்பென்னாத்தூரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் இல்லாததால் கடைவீதிகள், அனைத்துத் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

அதேபோல் கீழ்பென்னாத்தூரில் திருவண்ணாமலை-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை, அவலூர்பேட்டை சாலை, வேட்டவலம் சாலை போன்ற முக்கிய சாலைகள் மற்றும் இதர சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
Tags:    

Similar News