செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

2021-ம் ஆண்டு மட்டுமல்ல 2026-ம் ஆண்டிலும் அதிமுக தான் ஆட்சியை பிடிக்கும்- அமைச்சர் பேட்டி

Published On 2020-10-18 01:11 GMT   |   Update On 2020-10-18 01:11 GMT
‘2021-ம் ஆண்டு மட்டுமல்ல 2026-ம் ஆண்டிலும் அ.தி.மு.க. தான் ஆட்சியை பிடிக்கும்’, என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. 49-ம் ஆண்டு விழாவையொட்டி தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் 49-ம் ஆண்டு விழாவை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தையோ, எங்கள் நல்லாட்சியையோ எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்துவிட முடியாது. அடுத்த நூறாண்டு காலமும் சரித்திர வரலாற்றில் அ.தி.மு.க. இடம் பெறுவது உறுதியான ஒன்று.

கட்சி தொடங்கிய 48 ஆண்டுகளில் அதிக ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் இருந்தது அ.தி.மு.க. தான். அதனை யாராலும் மறுக்கமுடியாது. இந்த வரலாறு வேறு எந்த கட்சிகளுக்கும் இல்லை. இனி வரும் காலங்களிலும் இந்த வெற்றி தொடரும். 2021-ம் ஆண்டு மட்டுமல்ல 2026-ம் ஆண்டிலும் அ.தி.மு.க.தான் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும். இது உறுதி.

அ.தி.மு.க. அரசு மக்களுக்கான அரசு. அதுமட்டுமன்றி சமூகநீதிக்கான அரசாகவும் விளங்குகிறது. எந்தவகையிலும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பாதிக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியதே இல்லை. இடஒதுக்கீடு பாதிக்கப்படும் என்பதால் தான் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. அந்த நிலைப்பாட்டில் அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது.

எனவே இந்த விவகாரத்தில் சமூக நீதி பாதுகாப்பில் அரசு மிகவும் கவனமாக இருக்கிறது. சமூகநீதி பாதுகாக்கப்படுவது நிச்சயம். அதற்குரிய நடவடிக்கைகளை சட்டத்துறை அமைச்சர் நிச்சயம் எடுப்பார். எனவே இடஒதுக்கீடு குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களை கண்டுகொள்ளவே வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News