செய்திகள்

விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலத்திற்கு வருகிறது

Published On 2019-06-21 07:00 GMT   |   Update On 2019-06-21 09:37 GMT
கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலத்திற்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை சாலிகிராமத்தில் உள்ள கண்ணபிரான் காலனியில் கண்ணம்மாள் தெருவில் 54-ம் எண் வீட்டில் வசித்து வருகிறார்.

அவருக்கு சொந்தமாக செங்கல்பட்டு அருகே மாமண்டூரில் ‘‘ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி’’ உள்ளது. இந்த கல்லூரியை அவர், ‘‘ஸ்ரீஆண்டாள் அழகர் எஜூகேசனல் டிரஸ்ட்’’ மூலம் நடத்தி வருகிறார்.

தே.மு.தி.க. கட்சி பணிகளை நிர்வாகம் செய்வதற்கு கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த்துக்கு கூடுதல் பணம் தேவைப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டது.

இதற்காக அவர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய செலவுகள் காரணமாக அவர் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மவுண்ட்ரோடு கிளையில் அவர் கடன் வாங்கினார். மதுராந்தகம் தாலுக்காவில் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி நிலத்தை வங்கியில் அடகு வைத்து அவர் கடன் பெற்றார்.

அந்த கல்லூரி மொத்தம் 25 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் 4,38,956 சதுர அடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 49 சர்வே எண்களில் ஆண்டாள் அழகர் கல்லூரியின் சொத்துக்கள் அடங்கி உள்ளன.

கல்லூரி பெயரில் உள்ள இடத்திற்கு கடன்கள் வாங்கிய நிலையில் அதற்கு ஜாமீனாக விஜயகாந்த் தனது பெயரிலும், தனது மனைவி பிரேமலதா பெயரிலும் சாலிகிராமத்தில் உள்ள 3 வீடுகளை குறிப்பிட்டு இருந்தார்.

சாலிகிராமத்தில் வேதவள்ளி தெரு, காவேரி தெருவில் இருக்கும் கதவு எண்.71, 72-ல் அமைந்துள்ள வீடுகளை அடகு வைத்துள்ளார். அதில் ஒரு வீடு 4651 சதுர அடி கொண்டது. மற்றொரு வீடு மற்றும் வணிக வளாகம் 10271 சதுர அடி கொண்டது.

அதுபோல சாலிகிராமம் கண்ணபிரான் காலனியில் உள்ள கண்ணம்மாள் தெருவில் இருக்கும் எண்.53-ல் உள்ள வீட்டையும் அடகு வைத்துள்ளார். அந்த வீடு 3013 சதுர அடி கொண்டது.

ஆண்டாள் அழகர் கல்லூரி பெயரில் அவர் வாங்கிய கடன் மற்றும் வட்டி தொகை 5 கோடியே 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாயை எட்டியது. இந்த தொகையை கடந்த சில மாதங்களாக விஜயகாந்த் திருப்பி செலுத்தவில்லை.

இதையடுத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதன் பிறகும், விஜயகாந்த் தரப்பில் இருந்து கடன் பாக்கி தொகை மற்றும் வட்டி தொகை கட்டப்படவில்லை.



இதையடுத்து விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி மற்றும் சாலிகிராமத்தில் உள்ள வீடுகளை ஏலம் விட்டு கடன் பாக்கி மற்றும் வட்டி நிலுவை தொகைகளை வசூலிப்பதற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன் பேரில் அசையா சொத்துக்கள் விற்பனைக்கான இ-ஏல பொது அறிவிப்பு பத்திரிகையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ‘‘விஜயகாந்த் மற்றும் ஜாமீன்தாரர்கள் ஆகியோரிடம் இருந்து பெறவேண்டிய கடன் பாக்கி தொகையான ரூ.5,52,73,825-க்கு அசையா சொத்துக்கள் உள்ள இடத்தில் உள்ளவாறு, உள்ளது உள்ளவாறு, எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையிலேயே விற்பனை செய்யப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணைய தளத்தில் இதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆண்டாள் அழகர் கல்லூரியின் குறைந்தபட்ச கேட்பு விலை ரூ.92,05,05,051 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல வேதவள்ளி தெரு, காவேரி தெருவில் உள்ள வீடுகள், வணிக வளாகம் ஆகியவற்றின் குறைந்தபட்ச கேட்பு விலை ரூ.4,25,84,849 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலிகிராமம் கண்ண பிரான் காலனியில் உள்ள கண்ணம்மாள் தெருவில் உள்ள வீட்டின் குறைந்த பட்ச கேட்பு விலை ரூ.3,04,34,344 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் அடுத்த மாதம் (ஜூலை) 26-ந்தேதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்தின் கல்லூரி மற்றும் வீடுகள் கடன் பாக்கி தொகைக்காக ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது தே.மு.தி.க. வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News