செய்திகள்
பாஜக

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக 2 வார்டுகளில் பா.ஜனதா போட்டி

Published On 2021-09-26 08:11 GMT   |   Update On 2021-09-26 08:11 GMT
ராதாபுரம் யூனியனிலும் ஒரு சில வார்டுகளில் அ.தி.மு.க.வை எதிர்த்து பா.ஜனதா போட்டியிடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

நெல்லை:

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.-பா.ஜனதா இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக பேசி உடன்பாடு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் பா.ஜனதா போட்டியிட வேண்டிய வார்டுகள், பதவிகள் உள்ளிட்டவை பேசி ஒப்பந்தம் கையெழுத்தானது.

மானூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ஜனதாவிற்கு 3 ஊராட்சி ஒன்றிய வார்டுகளும், ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டது. அதன்படி மானூர் ஒன்றியத்தில் உள்ள 10, 13, 21 ஆகிய வார்டுகளில் பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஒன்றியத்தில் 3 வார்டுகளுக்கு பதிலாக 5 வார்டுகளுக்கு பா.ஜனதா தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. அதற்கான அங்கீகார கடிதத்தையும் பா.ஜனதா தலைமை வழங்கி உள்ளது. அ.தி.மு.க உடன் போடப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தில் பெறப்பட்ட 10, 13, 21 ஆகிய வார்டுகளை தவிர கூடுதலாக 9, 14 ஆகிய 2 வார்டுகளில் தனது வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.

அதாவது 9-வது வார்டு மற்றும் 14-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

ஒரே வார்டில் 2 கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுவதால் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியில் உள்ளனர். பா.ஜனதாவின் இந்த செயல் கூட்டணி தர்மத்தை மீறிய செயல் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆதங்கத்தில் உள்ளனர். இதேபோல் ராதாபுரம் யூனியனிலும் ஒரு சில வார்டுகளில் அ.தி.மு.க.வை எதிர்த்து பா.ஜனதா போட்டியிடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

Tags:    

Similar News