ஆன்மிகம்
திருக்கொடியலூர் அகஸ்தீஸ்வரர் கோவில்

திருக்கொடியலூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நாளை மறுநாள் நடக்கிறது

Published On 2020-12-25 06:27 GMT   |   Update On 2020-12-25 06:27 GMT
சனீஸ்வரர் அவதரித்த தலமான திருக்கொடியலூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள திருக்கொடியலூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில் தனி சன்னதி உடன் அருள்பாலிக்கிறார், சனீஸ்வர பகவான். இத்தலத்தில் சூரியனின் மனைவிகளான உஷாதேவி, சாயாதேவி ஆகிய இருவரும் திருமியச்சூரில் உள்ள மேகநாதரை நோக்கி புத்திர பாக்கியம் வேண்டி தவம் செய்தனர். அப்போது இறைவன், நீங்கள் இருவரும் கணவரோடு இருந்து மேற்கே உள்ள ஈசனை வழிபட்டால் உங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று வரம் அளித்தார். அதன்படி சூரியன், உஷாதேவி, சாயாதேவி ஆகிய மூவரும் மேகநாதசுவாமி கூறிய இடத்திற்கு சென்று சிவபூஜை செய்து வழிபாடு செய்தனர்.

அப்போது தோன்றிய ஈசன், உஷாதேவிக்கு எமதர்மனையும், சாயாதேவிக்கு சனீஸ்வர பகவானையும் ஜனிக்கும்படி அருள்புரிந்து இருவரும் மங்கல சனீஸ்வரர், எமதர்மர் என இத்தலத்தில் வீற்றிருந்து தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சனி உபாதையும், எமவாதனையும் நீங்க செய்து அருள் புரிய வேண்டும். என்று கட்டளையிட்டார். சூரியன், உஷாதேவி, சாயா தேவி ஆகிய மூவரும் கூடியலூரே தற்போது கூட்டு திருக்கொடியலூர் என அழைக்கப்படுகிறது.

ஒரு சமயம் இந்திரன் தன்னை சனீஸ்வர பகவான் பிடிக்கப் போகிறார் என்பதை அறிந்து சனீஸ்வர பகவானிடம், தேவர்களுக்கெல்லாம் தலைவன் நான். நீ என்னை எப்படி பிடிக்கலாம்? என்று கேட்க, என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது என பதிலளித்தார், சனீஸ்வர பகவான். அப்படியானால் நீ என்னை பிடிக்கும் நேரத்தை சொல்லிவிடு என்று இந்திரன் கேட்க, சனீஸ்வர பகவானும் நேரத்தை கூறினார்.

தன்னை சனீஸ்வர பகவான் பிடிக்க வருவதை அறிந்த இந்திரன், தான் என்ன செய்வது என்று அறியாமல் ஈசனை வேண்டி நின்றபோது அகத்திய முனிவர் அவ்வழியே வர, அவரை வணங்கி தன்னுடைய இக்கட்டான நிலையைக் கூறி அபயம் தேடினார்.

அதற்கு அகத்திய முனிவர், கூடியலூரில்(திருக்கொடியலூர்) குடி கொண்டுள்ள ஈசன் சன்னதியில், ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் வெளியே செல்லும்போது வழியில் பெருச்சாளி உருவம் எடுத்து மறைந்திரு என்று கூறிவிட்டு மறைந்தார். இந்திரனும் அதுபோல் கூடிய லூரில் (திருக்கொடியலூர்) அகத்திய முனிவர் வழிபட்ட அகஸ்தீஸ்வரர் சன்னதியில் உள்ள அபிஷேக தீர்த்தம் செல்லும் கோமுக வழியில் பெருச்சாளி உருவம் எடுத்து மறைந்து கொண்டார்.

சனீஸ்வர பகவானுக்கு உரிய நேரமும், அகஸ்தீஸ்வரர் சாயரட்சை பூஜை நேரமும் கூடி வந்தது. அபிஷேகமும் நடந்தது. விஜய தீர்த்தமும் கோபுரத்தின் வழியே வெளியேறியது. அப்போது பெருச்சாளி உருவத்தில் மறைந்திருந்த இந்திரன் மீது அபிஷேக நீர் பட்டு இந்திரன் புனிதம் அடைந்தார். சனீஸ்வர பகவானின் வக்ர பார்வையில் இருந்து காப்பாற்றப்பட்டார்.

பின்னர் தனது சுய உருவத்தில் வெளியில் வந்த இந்திரன், சனீஸ்வர பகவானை பார்த்து தான் தப்பித்து விட்டதாக எண்ணி திமிராக கூறினார். உடனே சனீஸ்வர பகவான் புன்முறுவலுடன், நீங்கள் உங்கள் சிம்மாசனத்தை விட்டு கீழே இறங்கி போகும் வழியில் உருமாறி மறைந்து இருந்ததே என் பிடியில் தான் என்றார். சனீஸ்வர பகவானின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதை உணர்ந்த இந்திரன், இந்திர லோகத்தில் உள்ள தேவர்கள் அனைவரையும் அழைத்து கூடியலூர் எனப்படும் திருக்கொடியலூரில் தேவர் தீர்த்தத்தை உருவாக்கி அதில் நீராடி அகஸ்தீஸ்வரர்க்கு அபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை தங்கள் மீது தெளித்து புனிதமாகி கொண்டனர்.

இங்குள்ள சனீஸ்வர பகவானுக்கு கருப்பு வஸ்திரம், நீலோத்பவ மலர், எள் தீபம் ஏற்றி வழிபட்டு இந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் சனீஸ்வர பகவானின் முக்கிய பார்வையில் இருந்து விடுபட்டு இந்திரன் ராஜ பதவியும், தேவர்கள், தேவலோகத்தையும் அடைந்தனர் என்று இந்த கோவில் தலபுராணம் தெரிவிக்கிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மங்கல சனீஸ்வர பகவான் ஆலயம், மற்ற சனீஸ்வர பகவான் ஆலயத்தையும் விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அகத்தியர் சிவபூஜை செய்த தலமாக இருப்பதால் பக்தர்களுக்கும், சிவனடியார்களுக்கும் சனீஸ்வர பகவானின் கடுமையான பார்வையில் இருந்து நீங்க அகஸ்தீஸ்வரர் பைரவர் கோலத்தில் சனீஸ்வரபகவான் எதிரே நின்று குரு போதனை நிமித்தமாக தோஷத்தை நீக்கி நற்பலனை பெற செய்கிறார் என்பதும் இவ்வாலயத்தில் சிறப்பாக கருதப்படுகிறது.

பல்வேறு சிறப்பு பெற்ற இந்த ஆலயத்தில் நாளை மறுநாள்(27-ந் தேதி) அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்

இதனைத்தொடர்ந்து பால், பன்னீர், தேன், திரவியம், பன்னீர், பஞ்சாமிர்தம், ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகாதீபாராதனை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பக்தர்கள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர் தன்ராஜ், தக்கார் மாதவன், மேலாளர் வள்ளி கந்தன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News