செய்திகள்
கொரோனா வைரஸ்

5 மாவட்டங்களில் உள்ள 50 சதவீத கொரோனா நோயாளிகள்

Published On 2021-04-22 05:05 GMT   |   Update On 2021-04-22 10:48 GMT
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினசரி பாதிப்புகள் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே சென்றதால் வைரஸ் தொற்று பல மடங்கு அதிகரித்துள்ளது.

தினசரி பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து நேற்று 12 ஆயிரத்தை நெருங்கியது. நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 681 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 3 ஆயிரத்து 750 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் 529 பேருக்கும், கோவையில் 715 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 263 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 10 லட்சத்து 25 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 லட்சத்து 27 ஆயிரத்து 440 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இதன் மூலம் 84 ஆயிரத்து 361 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 18 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதுவரை 13 ஆயிரத்து 258 பேர் கொரோனா பாதிப்பால் மரணத்தை தழுவி உள்ளனர்.

கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் குறிப்பிட்ட 5 மாவட்டங்களில் மட்டுமே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினசரி மொத்த பாதிப்பான 11 ஆயிரத்து 681 பேரில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று மொத்த பாதிப்பில் சுமார் 6 லட்சம் பேர் வரையில் 5 மாவட்டங்களிலேயே பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இதன் மூலம் 50 சதவீதம் அளவுக்கு மேற்கண்ட 5 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று தொடர்ந்து பதிவாகி வருவது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சென்னையை தவிர்த்து தமிழகத்தில் உள்ள 36 மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் சுமார் 10 மாவட்டங்களில் மட்டும் இரட்டை இலக்க எண்களிலேயே பாதிப்பு இருந்து வந்துள்ளது.

அரியலூரில் நேற்று 43 பேரும், தருமபுரியில் 83 பேரும் பாதிப்புக்குளாகி இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சியில் 38 பேரும், கரூரில் 85 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 95 பேருக்கும், நீலகிரியில் 65 பேருக்கும், பெரம்பலூரில் 10 பேருக்கும், புதுக்கோட்டையில் 62 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் 59 பேரும், சிவகங்கையில் 61 பேரும், திருப்பத்தூரில் 95 பேரும், திருவாரூரில் 99 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

கொரோனா பாதிப்பில் இந்த 12 மாவட்டங்களிலும் தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பெரம்பலூரில் மட்டும் மிகவும் குறைவான அளவிலேயே பாதிப்பு உள்ளது. அங்கு நேற்று 10 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அங்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Tags:    

Similar News