செய்திகள்
கைது

காரில் கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது

Published On 2020-10-18 02:51 GMT   |   Update On 2020-10-18 02:51 GMT
ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சா சிக்கியது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இங்கு நேற்று காலை கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட சந்தேகத்திற்கு இடமான ஒரு காரை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அந்த காரில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை வழியாக கேரளாவிற்கு 50 கிலோ எடை கொண்ட கஞ்சா, பண்டல் பண்டலாக கடத்த முயன்றது தெரியவந்தது.

இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் கஞ்சா கடத்திய கேரளாவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 44), சக்திவேல் (26) மற்றும் மதுரையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (60) ஆகிய 3 பேரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல் மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் மாங்காடு இன்ஸ்பெக்டர் தியாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பொற்பாதம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்த ஜனா ஜனார்த்தனன் (36), மகேஷ் (25) ஆகிய 2 பேரும் இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இந்தப்பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பொட்டலங்கள், 2 செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News