ஆன்மிகம்
குலசை முத்தாரம்மன்

நவராத்திரி நாயகி குலசை முத்தாரம்மன்

Published On 2020-08-08 05:50 GMT   |   Update On 2020-08-08 05:50 GMT
குலசை என்று அழைக்கப்படும் குலசேகரப்பட்டினத்தில் பல கோவில்கள் இருந்தாலும் முத்தாரம்மன் கோவில் உலக புகழ் பெற்றதாக திகழ்கிறது. 5
நெல்லையில் இருந்து சுமார் 68 கிலோ மீட்டர் தொலைவில் குலசேகரப்பட்டினம் உள்ளது. திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் கடற்கரையில் இந்த ஊர் அமைந்துள்ளது.

குலசை என்று அழைக்கப்படும் குலசேகரப்பட்டினத்தில் பல கோவில்கள் இருந்தாலும் முத்தாரம்மன் கோவில் உலக புகழ் பெற்றதாக திகழ்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை குலசை முத்தாரம்மனை திருச்செந்தூர் தாலுகா பகுதி மக்கள் மட்டுமே வழிபட்டு வந்தனர்.

முத்தாரம்மனின் அருளால் அவளது புகழ் மெல்லமெல்ல பரவியது. இன்று தமிழ்நாடு முழுவதும் குலசை முத்தாரம்மனை தெரியாத மக்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் மைசூருக்குப் பிறகு தசரா கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது இந்தத் தலத்தில்தான்.

கடந்த சில ஆண்டுகளாக குஜராத், மராட்டியம், ஒடிசா உள்பட மற்ற மாநிலங்களில் இருந்தும் மக்கள் மாறுவேடம் அணிந்து விரதம் கடைபிடித்து குலசை முத்தாரம்மனை வழிபட வர தொடங்கியுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் குலசை முத்தாரம்மனின் அருள்புகழ் பிரபலமாகி வருகிறது. வடமாநிலங்களில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் தற்போது குலசைக்கும் செல்ல தவறுவதில்லை.

இதற்கிடையே குலசை கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெறும் தசரா திருவிழாவை காண்பதற்கும், படம் பிடிப்பதற்கும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதன் காரணமாக குலசை தசரா திருவிழா உலக புகழ் பெற்றதாக மாறிவருகிறது. கடந்த ஆண்டு தசரா விழாவில் சுமார் 800 தசரா குழுக்கள் பங்கேற்றன. இந்த ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் உருவாகியுள்ளன. சுமார் 10 லட்சம் பேர் வேடம் அணிந்து வழிபாட்டை மேற்கொண்டுள்ளனர். இது இந்தியாவில் எந்த ஒரு தலத்திலும் காணமுடியாத அற்புதம் ஆகும்.

இத்தகைய மகிமை பொருந்திய குலசை முத்தாரம்மன் தலம் முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இறைவி சுயம்புவாக தோன்றிய இந்த ஆலயத்தில் ஞானமூர்த்தீஸ்வரருடன் ஒருசேர அமர்ந்திருக்கிறாள். குலசேகரப்பாண்டிய மன்னன் ஆட்சி காலத்தில்தான் இக்கோவிலுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு ஏற்பட்டது.
குலசேகரப்பாண்டிய மன்னருக்கு ஒரு தடவை வெட்கை நோய் ஏற்பட்டது. சூடு தாங்காமல் மன்னர் வயிற்றுவலியால் துடித்தார். நோய் நீங்குவதற்காக அவர் குலசை முத்தாரம்மனை முத்துக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டார். இதனால் மன்னர் நோய் நீங்கியது. அன்று முதல் அம்மனுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் ஏற்பட்டது.

ஒருநாள், மன்னரின் கனவில் தோன்றிய அம்மன் இந்த சிறிய ஊரை உலகறியச் செய்யுமாறு பெரிய நகரமாக மாற்று என்று ஆணையிட்டாள். அவளின் கட்டளையை ஏற்று குலசேகரப் பாண்டியன் அம்பாளுக்கு கோவில் கட்டினான். பின்னர், அவளுக்குச் சிறப்பான பூஜைகளைச் செய்து வழிபடத் தொடங்கினான். இதனைப் பார்த்த மக்களும், இங்கு திரண்டு வந்து வழிபடலாயினர். இதனையடுத்து முத்தாரம்மனின் சக்தி அனைவருக்கும் தெரியவரவே இந்த ஊர் பெருமைமிக்கதாக விளங்கத் தொடங்கியது என்று சரித்திரக்குறிப்புகள் கூறுகின்றன.
Tags:    

Similar News