ஆன்மிகம்

எண்ணங்களை ஈடேற்றும் அகஸ்தீஸ்வரம் ஸ்ரீராமர் திருக்கோவில்

Published On 2019-06-28 01:35 GMT   |   Update On 2019-06-28 01:35 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவிலுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் கொட்டாரம் என்னும் ஊரில் இருந்து தெற்கில் 2 கிலோமீட்டர் தூரத்தில் அகஸ்தீஸ்வரம் ஸ்ரீராமர் திருக்கோவில் அமைந்துள்ளது.
ராமபிரான் இலங்கைக்குச் சென்று, சீதை இருக்கும் இடத்தைக் கண்டுவர வேண்டி, தனது கணையாழியை வானர வீரர்களில் ஒருவரான அனுமனிடம் கொடுத்தார். அத்துடன் தானும் சீதையும் மட்டுமே அறிந்த சில நிகழ்வுகளையும் அனுமனிடம் கூற, அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குள் நுழைந்தார். அங்கு பல இடங்களிலும் தேடி, இறுதியில் சீதையை அசோகவனத்தில் கண்டார்.

ராமபிரான் அளித்த கணையாழியை, சீதையிடம் கொடுத்து விவரங்கள் கூறினார். மகிழ்ந்த சீதாதேவி கொடுத்த சூளாமணியை பெற்றுக்கொண்டார். பின்னர் இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டு, ராவண தர்பாரில் ராமபிரானின் ஆற்றலை எடுத்துக்கூறி எச்சரித்தார். அப்போது அனுமனின் வாலுக்கு அசுரர்கள் தீயிட்டனர். அத்தீயைக் கொண்டு இலங்கையை எரித்தார்.

பின்னர் அனுமன் நற்செய்தி கொண்டுவருவான் என ஆவலுடன் காத்திருந்த ராமபிரானிடம், சீதை கொடுத்த சூளாமணியைக் கொடுத்து “கண்டேன் அந்த கற்பினுக்கணியை” என்றார். அதைக் கேட்டு ராமபிரானின் முகம் மலர்ந்தது. பின்னர் ராமபிரான் தனது பரிவாரங்கள் மற்றும் வானர வீரர்களின் உதவியோடு, கடலில் பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்று போர் தொடுத்தார். அந்தப் போரின் இறுதியில் ராவணன் கொல்லப்பட்டான்.

இதையடுத்து ராவணனின் தம்பி விபீஷணனுக்கு முடிசூட்டி விட்டு, புஷ்பக விமானத்தில் சீதாதேவி, தம்பி லட்சுமணன் ஆகியோருடன் அயோத்தி புறப்பட்டார் ராமபிரான். அங்கு சீதாதேவி, அனுமன், தன் சகோதரர்கள், சுக்ரீவன், விபீஷணன் உள்ளிட்டோர் சூழ்ந்திருக்க ஸ்ரீராமர் சக்கரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்து கொண்டார்.

மேற்கூறியவை தான் ராமாயணம் சுந்தர காண்டத்தின் ரத்தினச் சுருக்கமாகும். சுந்தர காண்டத்தின் அனைத்துச் சர்க்கங்களையும் பாராயணம் செய்ய இயலாதவர்கள், சுந்தர காண்டச் சுருக்கத்தை அனுதினமும் தொடர்ந்து ஒரு மண்டலம் காலை, மாலை பாராயணம் செய்து வந்தால் எந்த நற்காரியத்தை மனதில் நினைத்திருந்தாலும், அது தடங்கலின்றி சுபமாக விரைவில் நிறைவேறும்.

வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம், துளசிதாசர் எழுதிய ராமசரித மானஸ், ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தி திருமகன் என ராமாயணம் பற்பல பெரியோர்களால் எழுதப்பட்டதை அறிந்திருப்போம். அகத்திய மாமுனிவராலும் ராமாயணம் எழுதப்பட்டது. ஆம்! இதனைப் பற்றிய புராணக்குறிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவண்பரிசாரம் திருத்தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

விடிந்தால் திருக்கயிலை மலையில் உலகாளும் ஈசனுக்கும், அன்னை உமையவளுக்கும் திருக்கல்யாணம். அங்கே தேவர்களும், முனிவர்களும் மட்டுமன்றி உலகமே திரண்டிருந்தது. அதுசமயம் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. தன் திருமணம் காண வந்த அன்பர்களின் கனம் தாங்காது, பூமி தாழ்ந்து விட்டதை உணர்ந்த சிவபெருமான், அகத்தியரை அழைத்தார். பூமியை சமப்படுத்த வேண்டி தென்பகுதிக்குச் செல்ல ஆணையிட்டார்.

“தென்பகுதிக்கு நான் சென்றுவிடுவதால் தங்களின் திருமணக்கோலத்தை தரிசிக்க முடியாமல் போகுமே” என அகத்தியர் சொல்ல, அகத்தியர் விரும்பும் தலங்களில் எல்லாம் தமது திருமணக்கோலத்தை காட்டியருளுவதாக கூறியருளினார் சிவபெருமான். அதன்பிறகு அகத்தியர் தென்பகுதிக்குப் புறப்பட்டார். பூமி சமன் ஆனது.

அப்படி அகத்தியர், பொதிகையை கடந்து தெற்கில் வந்தபோது குமரியில் சிவலிங்கம் ஸ்தாபித்து ஈசனை வழிபட்டார். அங்கேயே மீண்டும் ஈசனின் திருமணக்காட்சியை காணவேண்டி அகத்தியர் ஈசனை வேண்ட, அங்குள்ள அத்திமரத்தின் கீழ் அகத்தியருக்கு ஈசன் தமது திருமணக் கோலக் காட்சியை காட்டியருளினார்.

பின்னாளில் வந்த பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபன் இங்கு கோவில் எழுப்பினான். அகத்தியர் வழிபட்ட ஈசன் ‘அகஸ்தீஸ்வரர்’ என்றும், இத்தலம் ‘அகத்தீஸ்வரம்’ என்றும் அழைக்கப்படலாயிற்று. அகத்தியர் இத்தலம் வந்தபோது அவரை, அருகிலுள்ள திருவண்பரிசாரம் எனும் திருப்பதிச்சாரம் திருத்தலத்தில் அனுமன் சந்தித்தார். பின்னர் அகத்தியரிடம், ராமாயணம் இயற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி அகத்திய மாமுனிவர், திருப்பதிச்சாரம் திருத்தலத்தில் ராமாயணம் இயற்றியருளினார்.

அகத்திய முனிவர் எழுந்தருளிய அகஸ்தீஸ்வரம் திருத்தலத்தில் ராமபிரானுக்கும் தனித் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ராமர் ஆலயமும் பல ஆண்டுகள் கடந்த பழமையானது ஆகும். கோவில் கருவறையில் ஸ்ரீராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் சமேதராக நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீராம நாமம் ஒலிக்கும் இடத்தில் எல்லாம் அனுமன் கண்டிப்பாக அருள்பாலிப்பார். இங்கு பக்தர்கள் ‘அனுமன் சாலிசா' மற்றும் ‘சுந்தர காண்டம்', ‘ஸ்ரீராம நாமம்’ ஆகியவற்றை பாராயணம் செய்து வழிபடுகிறார்கள். இங்கும் சுந்தரகாண்டம் கூட்டுப் பாராயணம் மாதந்தோறும் புனர்பூசம் நட்சத்திர நாட்களில் வெகுச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் அஷ்டமி, ஏகாதசி, நவமி திதி நாட்களிலும், புதன்கிழமைகளிலும் பக்தர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்தும், சுந்தரகாண்டம் பாராயணம் செய்தும் வழிபட்டு தத்தமது கோரிக்கைகள் நிறைவேறப் பெறுகிறார்கள்.

இங்குவந்து சுந்தரகாண்டம் பாராயணம் செய்து, கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து வழிபட்டு வந்தால் எளிதில் எண்ணங்கள் நிறைவேறும் என்கிறார்கள்.

ராமாயணத்தின் பெருஞ்சிறப்புகளை வளரும் தலைமுறையினர் எளிதில் அறிந்துகொள்ளும் பொருட்டு, ஆண்டுதோறும் அகஸ்தீஸ்வரம் ஸ்ரீராமர் திருக்கோவிலில் ‘ராமாயண ஞானவேள்வி' தொடர்ந்து பத்து நாட்கள் நடத்தப்படுகிறது. விழாநாட்களில் தினமும் மூலவர் ராமபிரானுக்கு திருமஞ்சனமும், சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது. அதோடு தினமும் ராமாயணத்தின் அனைத்து காண்டங்களையும் சுருக்கி, பக்தர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் பேருரையும் நிகழ்த்துகிறார்கள்.

அமைவிடம் :

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் இருந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவிலுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் கொட்டாரம் என்னும் ஊர் வரும். அங்கிருந்து தெற்கில் 2 கிலோமீட்டர் தூரத்தில் அகஸ்தீஸ்வரம் ஸ்ரீராமர் திருக்கோவில் அமைந்துள்ளது.

சிவ.அ.விஜய் பெரியசுவாமி
Tags:    

Similar News