லைஃப்ஸ்டைல்
சமூக இடைவெளியை கடைபிடிப்போம்

சமூக இடைவெளியை கடைபிடிப்போம்

Published On 2020-05-23 09:05 GMT   |   Update On 2020-05-23 09:05 GMT
கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளிலேயே சமூக இடைவெளிதான் மிக மிக அவசியம். எந்த விழாவாக இருந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடிப்போம் என்பதே நாம் ஒவ்வொருவரும் எடுக்கும் உறுதிமொழியாக இருக்கட்டும்!
சமூக இடைவெளி, முககவசம், கையுறை இதனுடன்தான் வாழ வேண்டும் என்று நம்மை கட்டாயப்படுத்தி விட்டது கொரோனா.

கடந்த ஆண்டு சீனாவில் உருவானதாக கூறப்படும் கொரோனா என்ற கொடிய வைரஸ், இன்று உலகம் முழுவதும் ஆட்கொண்டு விட்டது. இந்தியாவில் அதன் பாதிப்பு என்னவோ அதிகம்தான் என்றாலும், மக்கள் தொகையை கணக்கிடுகையில் உயிர்ப்பலி குறைவுதான். ஊரடங்கால் இந்த நோய் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும், இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. என்னதான் இயல்பு நிலைக்கு வந்தாலும், நோய் நம்மை விட்டு முற்றிலும் விலகவில்லை. அதனை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதனால்தான் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், கையுறை அணிய வேண்டும். வேலைக்கு சென்றாலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்றாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களை காட்டிலும் குமரி மாவட்டத்தில் இந்த நோயின் பாதிப்பு குறைவுதான். அதாவது வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும்தான் கொரோனா உள்ளது. அவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பி வருகின்றனர். எனவே நோய் பற்றி அச்சம் இனி வேண்டாம்.

அதேநேரத்தில் நோய் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாம் ஒத்துழைக்க வேண்டும். அதாவது அரசு அறிவித்துள்ள விழிப்புணர்வை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு தொழில்களை இயங்க அரசு அனுமதி அளித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அதாவது வருகிற 31-ந் தேதியுடன் ஊரடங்கு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. அப்போது நாம் முன்பு மாதிரியே கூட்டம், கூட்டமாக எங்கும் செல்லாமல் ஊரடங்கு காலத்தில் வாழ்ந்தது போன்றே வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது இனிவரும் நாட்களில் நாம் எங்கு சென்றாலும் முககவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். கையுறை வேண்டும். வேலைக்கு சென்றாலும் சரி, அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடை வீதிக்கு சென்றாலும் சரி சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதேநேரத்தில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த பிறகு சானிடைசர் கொண்டு கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் கொரோனா எனும் அரக்கன் நம்மை நெருங்க விடாமல் செய்ய முடியும்.

கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளிலேயே சமூக இடைவெளிதான் மிக மிக அவசியம். இனிவரும் நாட்களில் நாம் எங்கும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். எந்த விழாவாக இருந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடிப்போம் என்பதே நாம் ஒவ்வொருவரும் எடுக்கும் உறுதிமொழியாக இருக்கட்டும்!
Tags:    

Similar News