செய்திகள்
கோப்புபடம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இதுவரை 950 டிரைவர், கண்டக்டர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்

Published On 2021-04-10 14:59 GMT   |   Update On 2021-04-10 14:59 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இதுவரை 950 அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். பஸ்சில் பயணிகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டது. சுமார் 6 மாத காலம் பஸ்கள் இயக்கப்படாமல் பணி மனைகளிலேயே நின்றுகொண்டிருந்தன. ஊரடங்கு பெருமளவு தளர்த்தப்பட்ட பின்னர் பஸ்கள் மீண்டும் ஓட தொடங்கியது. ஆனாலும் பயணிகள் அதிக அளவில் பஸ்சில் பயணிப்பதை தவிர்த்தனர். இதனால், அரசு போக்குவரத்து கழகம் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணிகள் செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அது இன்று (சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி பஸ்சில் செல்லும் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். பஸ்சில் நெருக்கியடித்து நின்றபடி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் கூடுதலாக பயணிகள் செல்வது தெரிந்தால் அப்பகுதிக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கவும் திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மண்டல மேலாளர் ராஜ்மோகன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டலத்திற்குட்பட்டப் பகுதிகளில் 13 பணிமனைகளில் இருந்து 950 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் களுக்கு தடுப்பு நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது டிரைவர், கண்டக்டர்கள் பணியின்போது கட்டாயம் முக கவசம் அணிந்திடவும், கைகளில் அடிக்கடி சானிடைசர் தடவிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில் பஸ்சில் பயணிகளும் முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட டிரைவர், கண்டக்டர், டிக்கெட் பரிசோதகர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக அவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி இதுவரை 950 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு படிப்படியாக தடுப்பூசி போடப்படும். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 100 டிரைவர், கண்டக்டர்களுக்கு அரசு ஆஸ்பத்திரி மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மண்டல பொதுமேலாளர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Tags:    

Similar News