செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 100 சதவீதம் ‘நீட்’ தேர்வு இருக்காது - மா.சுப்பிரமணியன் உறுதி

Published On 2021-06-27 03:02 GMT   |   Update On 2021-06-27 03:02 GMT
மாணவர்கள் உணர்ந்தது போல் தமிழகத்தில் 100 சதவீதம் நீட் தேர்வு இருக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.
சென்னை:

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இன்றைய (நேற்று) கொரோனா பாதிப்பு 5,415 ஆக உள்ளது. தொற்று குறைந்தாலும் பரிசோதனையின் எண்ணிக்கையை குறைக்கமாட்டோம். மேற்கு மாவட்டங்களில் உள்ள மகப்பேறு மருத்துவமனை டாக்டர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. மகப்பேறு மையங்களில் யோகா மற்றும் மூச்சுபயிற்சி அளிக்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். தமிழகத்தில் ஆண்டுதோறும் 10 லட்சம் பிரசவங்கள் நடக்கிறது. இதில் 61 சதவீதம் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. மேலும் விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். இது தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்து. அவ்வாறான சிகிச்சையை அனுமதிக்க கூடாது என டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

கடந்த கால தி.மு.க ஆட்சியில் அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவு தேர்வு தடுக்கப்பட்டது. அதேபோன்று தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வு குறித்தான தாக்கத்தை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.



இந்த தீர்மானம் ஜனாதிபதி அல்லது சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்கப்படாத வகையில் இருக்கும். ஒரு வேளை ‘நீட’ தேர்வு நடத்தப்படும் சூழல் வந்துவிட்டால் மாணவர்கள் தேர்வுக்கு முழுமையாக தயாராக வேண்டும். அரசு அதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது. ‘நீட்’ வேண்டாம் என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு. 100 சதவீதம் 
நீட் தேர்வு
 இருக்காது. மாணவர்கள் இதை உணர்ந்து விட்டனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் இன்னும் உணரவில்லை.

3-வது அலை வராமல் தடுக்க பணிகள் மேற்கொண்டுள்ளோம். ஒருவேளை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தற்போதைய சூழலில் வெளிச்சந்தையில் அரசு தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பு இல்லை. ஜூலை மாத தொகுப்பில் தமிழகத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகளாக மத்திய அரசு உயர்த்தி தர உள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கான பிந்தைய சிகிச்சை வழங்க ஆஸ்பத்திரியை விரைவில் முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பார். மேலும் கருப்பு பூஞ்சைக்காக தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளது. மாவட்ட ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News