செய்திகள்
கோப்புபடம்

நாளை முதல் பவர் டேபிள் நிறுவனங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Published On 2021-07-27 10:30 GMT   |   Update On 2021-07-27 10:30 GMT
தற்போது கொரோனா அலை ஓய்ந்துள்ளதையடுத்து கட்டண உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் ‘சைமா’வுக்கு கடிதம் அனுப்பியது.
திருப்பூர்:

திருப்பூர் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) மற்றும் பவர்டேபிள் உரிமையாளர் சங்கங்கள் மேற்கொள்ளும் ஒப்பந்த அடிப்படையில் பவர்டேபிள் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த 2016-ல் ஏற்படுத்தப்பட்ட கட்டண உயர்வு ஒப்பந்தம் கடந்த 2020 அக்டோபர் 30ல் முடிந்தது. தற்போது கொரோனா அலை ஓய்ந்துள்ளதையடுத்து கட்டண உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக  தொடங்க வேண்டும் என  பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் ‘சைமா’வுக்கு கடிதம் அனுப்பியது.

தற்போதைய தொழில் நெருக்கடிகளை குறிப்பிட்டும், பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்த பேச்சு முடிந்த பின் தொடங்கலாம் என சைமா சங்கம் பதிலளித்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ளாத பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதற்கான செயற்குழு கூட்டம் திருப்பூர்  லட்சுமிநகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர் சங்கர், துணை செயலாளர் முருகேசன், பொருளாளர் சுந்தரம் முன்னிலை வகித்தனர்.

சங்க செயலாளர் நந்தகோபால், ‘சைமா’ சங்கம் அளித்துள்ள பதில் கடிதம் குறித்து பேசினார்.உற்பத்தி செலவினங்கள் பலமடங்கு அதிகரித்துள்ளது. பழைய ஒப்பந்த காலம் முடிந்து ஒன்பது மாதமாகிவிட்டது. இனியும் தாமதித்தால் பவர்டேபிள் நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்.

தொழில் சூழல்களை உணர்ந்த சிறு, குறு உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பவர்டேபிள் கட்டணத்தை உயர்த்தி வழங்கி வருகின்றன.பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்களோ, ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே சம்பள உயர்வு வழங்க முடியும் என்கின்றன.

’சைமா’ சங்கம், பவர்டேபிள் கட்டண உயர்வு பேச்சுவார்த்தையை உடனே  தொடங்க வலியுறுத்தி நாளை 28-ந் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவது, பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஆர்டர் பெறுவது, ஆடை தயாரிப்பை நிறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News