செய்திகள்

அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவுக்கு அவசியம் இருக்காது - தலைமை தேர்தல் அதிகாரி

Published On 2019-04-20 08:47 GMT   |   Update On 2019-04-20 08:57 GMT
அரியலூர் மாவட்டத்தில் மோதல் நடந்த பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். #TNElections2019 #Ponparappi
சென்னை:

தர்மபுரியில் தேர்தலின்போது வாக்குசாவடிகளில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், அதனால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் மனு அளித்துள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மோதல் ஏற்பட்டதால் அங்கும் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் மோசடி நடந்ததாக வந்த புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் கடலூரில் 1, திருவள்ளூரில் 1, தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தவேண்டுமா? என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் பொது பார்வையாளரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அந்த அறிக்கை இன்று மாலை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

அதன் அடிப்படையில், இந்த 10 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டுமா? இல்லையா? என்பதை தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.



அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நடந்த இடத்தில் பிரச்சினை இல்லை. எனவே, பொன்பரப்பில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார். #TNElections2019 #Ponparappi
Tags:    

Similar News