பெண்கள் உலகம்
பெண் என்று பூமிதனில் பிறந்து விட்டால்...

பெண் என்று பூமிதனில் பிறந்து விட்டால்...

Published On 2022-01-31 03:16 GMT   |   Update On 2022-01-31 03:16 GMT
“எந்த நாடு பெண்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையோ எந்த சமுதாயம் பெண்களை மேம்படுத்தவில்லையோ அந்த நாடும், சமுதாயமும் இப்போது மட்டுமல்ல எந்த காலத்திலும் உயர்வடைய போவதில்லை” என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்.
தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை “மாதா பிதா குரு தெய்வம்” தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பது ஆன்றோர் வாக்கு, ஆம் ஒவ்வொரு வெற்றிகரமான ஆடவனின் பின்னால் ஒரு பெண்ணின் தியாகம் மறைந்திருக்கிறது என்று கூறுகிறது ஒரு பழமொழி. “ஒரு மனிதன் கவிஞனாகவோ, கலைஞனாகவோ, கோழையாகவோ, வீரனாகவோ மாறுவது ஒரு பெண்ணை பொறுத்ததே” என்கிறது இன்னொரு பழமொழி.

இன்று அமைச்சர்களாக, ஆசிரியர்களாக, வீராங்கனையாக, விமானியாக, விண்வெளி ஆராய்ச்சியாளர்களாக பெண்கள் முன்னேறி வருகின்றார்கள். அந்த முன்னேற்றம் ஒரு முழுமையை அடைந்திருக்கிறதா? இது ஒரு கேள்விக்குறிதான்.

பெண் என்று பூமிதனில் பிறந்து விட்டால் இது ஒரு முற்றுபெறாத வாக்கியம்.

பெண்களுடைய மதிப்பை, சிறப்பை, உயர்வை ஒரே வரியில் சொல்லி விடலாம். எப்படி எனில்

“இந்த உலகத்தில் வாழ்கின்ற மக்கள் எல்லோருமே பெண்ணினத்தின் அன்பளிப்பு”

“எந்த நாடு பெண்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையோ எந்த சமுதாயம் பெண்களை மேம்படுத்தவில்லையோ அந்த நாடும், சமுதாயமும் இப்போது மட்டுமல்ல எந்த காலத்திலும் உயர்வடைய போவதில்லை” என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்.

அவ்வையார், நளாயினி, தமயந்தி, கண்ணகி, சீதை, அன்னிபெசண்ட் அம்மையார், கவிக்குயில் சரோஜினி தேவியார், நாட்டிற்காக உயிர்தந்து மடிந்த இந்திராகாந்தி, கம்ப்யூட்டரை தோற்கடிக்கும் கணிதமேதை சகுந்தலா தேவி, வீராங்கனைகள் ஜோதிர்பாய் சிக்தர், பி.டி.உஷா, உலக வீராங்கனை மரியா ஜோன்ஸ், நற்குண செயல்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அன்னை தெரசா ஆகியோரின் புகழ் இன்றும் மங்காமல் நிலைத்து நிற்பதற்கு காரணம் அவர்களுடைய தூய்மையான செயல்கள் தான். இவர்களை போன்று அதர்மத்தையும் அநியாயத்தையும் வென்று நீதியையும், தர்மத்தையும் நிலைநாட்டும் பெண்கள் இன்று பலர் உள்ளனர்.

“எல்லையற்ற ஆற்றலுமுள்ள இறைவன் திருவுள்ளமென்

எவ்வுயிரும் தோன்றுவதற்கு ஏற்றதொரு திருவழியாய்

வல்லமையாய் பெண்ணினத்தை வடிவமைத்தான் அற்புதமே

வாழ்ந்து வரும் மக்களில் இவ்வளமறிந்தோர் எத்தனை பேர்”

ஆண்களும், பெண்களும் சரிபாதியாக உள்ள சமுதாயத்தில் அந்த பாதி எண்ணிக்கையுடைய ஆண்களை பெற்றெடுத்தவர்கள் பெண்களே. பெண்ணின் கருப்பையில் உருவாகி அவளது ரத்தத்தையே உணவாக உண்டு வாழ்ந்துவருவதே இந்த மனிதகுலம், இதிலிருந்து உணரலாம் பெண்ணின் பெருமையை.

சங்க இலக்கியத்தில் முதன்மையான தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் கூறுகிறார்.

“பெருமையும் உரனும் ஆடுஉ மேன

அச்சமும் நாணும் மடனும் முந்துறத்தல்

நிச்சமும் பெண் பாற்கு உரிய என்ப”

பெருமையும், அறிவு வலிமையும் ஆணுக்குரியவை என்றும், அச்சம், நாணம், மடம் ஆகியன பெண்ணுக்குரியது என்பதும் பாட்டின் பொருள். இது பெண்ணின் சங்ககால நிலை ஆனால் பாரதி இதை அடியோடு ஒழித்து புதுவரிகள் தருகிறார்.

“நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்

ஞானம் நல்லறம் வீர சுதந்திரம் பேணும்

நற்குடிப் பெண்ணின் குணங்களாம்”

என்று பெண்மை மேம்பட வழி கூறியிருக்கிறார்.

தந்தையின் பார்வைக்குத் தண்டச்சோறாய், தாயின் பார்வைக்கு மடி நெருப்பாய், மாமியாரின் பார்வைக்கு மண்எண்ணெய்யாய் பார்க்கப்பட்ட பெண் பெண்ணாகவே பார்க்கப்படவில்லை என்பது தான் உண்மை. கல்யாணச் சந்தையிலே பார்வைக்கு வைக்கப்பட்டு பேரம் பேசி விலையாகிற கன்னியர் குலம் - சமூகத்தின் கண்ணீர்குளம். வரதட்சணை வேலியால் இன்றும் எத்தனையோ பெண்களுக்கு பிறந்தகமே தினசரி உலகமாயிருக்கிறது. வரதட்சணை தாலிக் கயிற்றையே மரணக் கயிறாக மாற்றிவிடுகிறது. ஒன்று மட்டும் நிச்சயம் பெண்மைக்கு இழைக்கப்பட்ட தவறுக்கும், தண்டனைக்கும் பலியாவது இம்மனிதகுலமே.

பெண் என்று பூமிதனில் பிறந்து விட்டால் என்று முற்றுப் பெறாத வாக்கியத்தின் தொடர்ச்சி எல்லோரும் எதிர்பார்ப்பது போல் கஷ்டமும், துன்பமும் அல்ல. இக்காலம் நவீன விஞ்ஞான காலம் முன்பு தவறுகள் நடந்திருக்கலாம் தவறியிருக்கலாம். ஆனால் இது தவறுகள் திருத்தப்படும் காலம் பெண்ணிய இயக்கங்களும், அரசாங்கமும் பெண் அடிமையை போக்கி பெண் ஆளுமை ஏற்படுத்தும் காலம் இது. ஆகவே பெண் என்று பூமிதனில் பிறந்து விட்டால் நலமே அன்றி நரகம் அன்று என்று இன்றைய பெண்கள் நிரூபித்து காட்ட வேண்டும்.

பெண்ணியத்தை அவமதித்துப் பெருமை பெற நினைத்தவர்கள் பெரும்பாவ சுமை ஏற்றுப் பெற்ற துன்பம் உலகறியும், எண்ணி எண்ணிப் பெண் பெருமை ஏற்றி புகழ்ந்தே எழுதி இன்பமுற்றார். இவ்வுலகில் இறைவனை போல் என்றும் உள்ளார்கள் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

-சு.ஐஸ்வர்யா,
Tags:    

Similar News