செய்திகள்
கோப்புப்படம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

Published On 2021-01-28 22:22 GMT   |   Update On 2021-01-28 22:22 GMT
வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) கூடுகிறது.
புதுடெல்லி:

இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.  இதன்படி பட்ஜெட் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) கூடுகிறது.

இது புதிய ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் வழக்கம் போல ஜனாதிபதி உரையுடன் தொடங்குகிறது. காலை 11 மணிக்கு, மக்களவை, மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றுகிறார்.

இந்த உரையில் எல்லையில் சீன அத்துமீறல் விவகாரம், வேளாண் சட்டங்கள், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம், தடுப்பூசிகளை உருவாக்குவதில் இந்தியாவின் சாதனை, நாட்டின் பொருளாதார நிலவரம், ராணுவம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் சுய சார்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 1-ந் தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்த முறை பட்ஜெட் தாக்கல், வழக்கமான காகித வடிவத்தில் இருக்காது. எனவே அனைத்து பட்ஜெட் ஆவணங்கள், பொருளாதார ஆய்வு அறிக்கை ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிகள் சபையில் வைக்கப்பட்ட உடன், இணையத்தில் கிடைக்கும் என்று மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர், கொரோனா கால வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்படுகிறது.

தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதால், இரு அவைகளும் ஒரே நேரத்தில் செயல்படாமல், காலையில் மாநிலங்களவையும், மாலையில் மக்களவையும் ஒவ்வொரு நாளும் தலா 5 மணி நேரம் மட்டுமே செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையில் மாநிலங்களவையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையில் மக்களவையும் செயல்படும் என்பது நினைவுகூரத்தக்கது.

ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே கேள்வி நேரம் அனுமதிக்கப்படும்.

கேண்டீன்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறுகிற முதல் கூட்டத்தொடர் இது என்பதால், எம்.பி.க்களும், மற்றவர்களும் நாடாளுமன்ற கேண்டீன்களில் உணவு வகைக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டியது வரும்.

பட்ஜெட் கூட்டத்தொடர் 2 அமர்வுகளாக நடத்தப்படும். முதல் அமர்வு பிப்ரவரி 15-ந் தேதி வரை தொடரும். இரண்டாவது அமர்வு மார்ச் மாதம் 8-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8-ந் தேதி முடியும்.

பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அவசர சட்டங்களுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து அவற்றை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட தேசிய தலைநகர் பிராந்தியத்திலும், அதையொட்டிய பகுதிகளிலும் காற்றின் தர மேலாண்மைக்கான ஆணைய அவசர சட்டம், நடுவர் மற்றும் சமரசம் (திருத்த) அவசர சட்டம், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) அவசர சட்டம் உள்ளிட்டவை, முறைப்படி மசோதாக்கள் தாக்கல் செய்து சட்டங்களாக்கப்படும்.

இந்த நிலையில், பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு போராடி வரும் விவசாயிகளுக்கு தங்களது ஒன்றுபட்ட ஆதரவை தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் தலைமையிலான 16 எதிர்க்கட்சிகள் இன்று ஜனாதிபதி உரையை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன.

இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத், டெல்லியில் நேற்று வெளியிட்டார்.

இதையொட்டி மேலும் அவர் கூறுகையில், குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையில் மத்திய அரசின் பங்கு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று 16 எதிர்க்கட்சிகளும் வலியுறுத்துகின்றன என கூறினார். 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் மீண்டும் குரல் கொடுத்துள்ளன.

ஜனாதிபதி உரையை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள் பட்டியலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசியமாநாடு, சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோசலிஸ்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ம.தி.மு.க., கேரள காங்கிரஸ் (எம்), அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்த கட்சிகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், “3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்துக்கு பதில் அளிப்பதில் பிரதமரும், பா.ஜ.க. அரசும் ஆணவமாகவும், பிடிவாதமாகவும், ஜனநாயக விரோதமாகவும் இருக்கிறார்கள். அரசின் இந்த உணர்வற்ற தன்மையினால் அதிர்ந்துபோய், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதற்கான கூட்டு கோரிக்கையை எதிர்க்கட்சிகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இந்திய விவசாயிகளுடன் ஒன்றுபட்டு நிற்பதில் எங்கள் உறுதியை காட்டும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஜனாதிபதி 29-ந் தேதி (இன்று) ஆற்றுகிற உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்கள் மாநிலங்களுடனும், விவசாயிகள் அமைப்புகளுடனும் சரியான ஆலோசனைகள் இன்றி கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தேசிய அளவில் ஒருமித்த கருத்து இல்லாதவை என்றும் எதிர்க்கட்சிகள் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டி உள்ளன.

ஜனாதிபதி உரையை புறக்கணிப்பது என காங்கிரஸ் தலைமையில் 16 எதிர்க்கட்சிகள் கூட்டாக முடிவு எடுத்து அறிவித்துள்ள நிலையில், இதேபோன்று மேலும் 2 கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அந்த கட்சிகள் ஆம் ஆத்மியும், சிரோமணி அகாலி தளமும் ஆகும். இக்கட்சிகள் தனித்தனியாக முடிவு எடுத்து அறிவித்துள்ளன.

இதையடுத்து ஜனாதிபதி உரையை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

வேளாண் சட்டங்கள், விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் வன்முறை, கொரோனா வைரஸ் தொற்று பரவல், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, துணை சபாநாயகர் தேர்தல் நடத்தாதது என பல பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்கின்றன.

எனவே ஜனாதிபதி உரை புறக்கணிப்புடன் நின்று விடாமல், நாடாளுமன்ற பட்ஜெட் தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்பும். அதைச்சந்திக்க ஆளும் பா.ஜ.க.வும் தயாராகவே இருக்கும். எனவே அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதி.
Tags:    

Similar News