செய்திகள்

ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 உதவி- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2019-02-11 07:20 GMT   |   Update On 2019-02-11 10:11 GMT
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியுதவியாக தலா ரூ.2000 வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #EdappadiPalaniswami
சென்னை:

சட்டசபையில் இன்று முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அம்மா வகுத்துத் தந்த பாதையில் உறுதியாக நடக்கும் அரசு, ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

பல மாவட்டங்களில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


இதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர்.

இதற்கென 1,200 கோடி ரூபாய் 2018-19 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். #TNAssembly #TNCM #EdappadiPalaniswami
Tags:    

Similar News