செய்திகள்
கோப்புபடம்

விதியை பின்பற்றி மீன்பிடி வலைகளை சரி செய்ததால் 146 படகுகளில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி

Published On 2021-07-19 11:34 GMT   |   Update On 2021-07-19 11:34 GMT
கடலூரில் விதியை பின்பற்றி மீன் வலைகளை சரி செய்ததால் 146 படகுகளில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரி கூறினார்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் 269 விசைப்படகுகளிலும், 10 செவுல் படகுகளிலும், 3141 என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளிலும், என்ஜின் பொருத்தப்படாத 988 நாட்டு படகுகளிலும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சொத்திக்குப்பம், சோனாங்குப்பம் உள்பட 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இதற்கிடையில் மீனவர்கள் பயன்படுத்தும் விசைப்படகுகளில் இழு வலைகளில் கண்ணி அளவு 40 மில்லி மீட்டருக்குள் இருப்பதாகவும், 240 குதிரை திறனை தாண்டி அதிக திறன் கொண்ட என்ஜின்களை பொருத்தி மீன்பிடிக்க செல்வதாக புகார் எழுந்தது.

இது தவிர 5 நாட்டிகல் மைல் தொலைவுக்குள் மீன்பிடிப்பதாகவும் புகார் எழுந்தது. இதை ஆய்வு செய்து தடுக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி மீன்வளத்துறை அதிகாரிகள் கடலூர், முடசல் ஓடை ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்களின் படகுகளை ஆய்வு செய்தனர். சென்னை, தர்மபுரி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்வளத்துறை இணை இயக்குனர் காத்தவராயன் உத்தரவின்பேரில் உதவி இயக்குனர் வேல்முருகன் தலைமையில் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அப்போது 269 விசைப்படகுகளில் பெரும்பாலான படகுகளில் விதிமீறல்கள் இருந்தது. இதையடுத்து 106 படகு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, மீன் பிடி வலைகளை சரி செய்ய உத்தரவிட்டனர். சில படகுகளில் என்ஜினில் அதிக திறன் உருவாக்கும் கருவி (இன்டர் கூலர்) பொருத்தப்பட்டு இருந்ததை கண்டு அதை அகற்றினர். 240 குதிரை திறனுக்கு அதிகமாக என்ஜின் பொருத்தக்கூடாது என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

அதன்படி மீனவர்கள் மீன்பிடி வலைகளில் 40 மில்லி மீட்டருக்கு அதிகமாக கண்ணிகளை மாற்றி வந்தனர். மாற்றப்பட்ட வலைகளை காண்பித்தபிறகு தான் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இதனால் மீனவர்கள் அவசர, அவசரமாக மீன்பிடி வலைகள், என்ஜின் ஆகியவற்றை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இது பற்றி மீன்வளத்துறை இணை இயக்குனர் காத்தவராயனிடம் கேட்ட போது, 269 விசைப்படகுகளையும் ஆய்வு செய்தோம். அதில் வலைகளில் கண்ணி அளவு 40 மில்லி மீட்டருக்கு குறைவாக இருந்த படகுகள் கண்டறியப்பட்டது. அதை சரி செய்ய அவகாசம் வழங்கினோம்.

அதன்படி 146 படகுகளில் வலைகள் சரி செய்யப்பட்டன. 123 படகுகளில் வலைகள், என்ஜின் ஆகியவற்றை சரி செய்யவில்லை. இவர்கள் சரி செய்த பிறகு அதை காண்பிக்க வேண்டும். மற்றவர்கள் மீன்பிடிக்க செல்லலாம். அதுவும் 5 நாட்டிகல் மைல் தொலைவுக்கு மேல் சென்று தான் மீன்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளோம் என்றார்.

இதனால் நேற்று மீன்பிடி வலைகளை சரி செய்த 146 விசைப்படகு மீனவர்கள் கடந்த 1 வாரத்திற்கு பிறகு நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

Tags:    

Similar News