செய்திகள்
ஆனைப்புல்

கால்நடைகளின் தீவனத்தேவை பூர்த்தியாவதால் ஆனைப்புல் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

Published On 2021-06-08 07:04 GMT   |   Update On 2021-06-08 07:04 GMT
ஆனைப்புல்சாகுபடியால் கால்நடைகளின் தீவனத் தேவை பூர்த்தியாவதால் உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வமுடன் இதனை வளர்த்து வருகின்றனர்.
உடுமலை:

இயற்கை விவசாயத்தின் இணை தொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்பு ஆகும்.விளைநிலங்களின் தாவரக்கழிவுகள் மற்றும் களைச்செடிகள் கால்நடைகளின் தீவனத் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்கிறது. ஆனாலும் தற்போதைய நிலையில் ரசாயன பூச்சி மருந்துகள் மற்றும் களைக்கொல்லிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால் கால்நடைகளுக்குப் பசுந்தீவனம் போதிய அளவில் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதற்குத் தீர்வாக விளைநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பசுந்தீவனப் பயிர்களைப் பயிரிட்டு கால்நடைகளுக்கு வழங்கி வருகின்றனர்.கினியாப்புல், எருமைப்புல், கொழுக்கட்டைப் புல், நேப்பியர் புல் போன்ற புல் வகைகளும், முயல் மசால், குதிரை மசால், வேலி மசால், ஆட்டு மசால், தீவன தட்டைப்பயறு, சங்குப்பூ போன்ற பயறு வகைகளும், சூபா புல், வாகை, வேம்பு, அகத்தி போன்றவையும் கால்நடைகளின் தீவனத்துக்காக விவசாயிகளால் வளர்க்கப்படுகிறது. 

இந்தநிலையில் ஆனைப் புல்லின் மேம்படுத்தப்பட்ட வடிவமான சூப்பர் நேப்பியர் ரக புல் வகைகள் கால்நடைகளுக்கு மிகவும் கைகொடுத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உடுமலை பகுதியில் சூப்பர் நேப்பியர் புல் வகையைப்பயிரிட்டுள்ள விவசாயி கூறியதாவது:-

இன்றைய நிலையில் கால்நடைகளுக்கு சமச்சீரான உணவு வழங்குவதற்காக அதிக அளவில் செலவு செய்ய வேண்டியதுள்ளது. பொதுவாக மாடுகளுக்கு கோதுமை தவிடு, அரிசித் தவிடு, புண்ணாக்கு, உளுத்தம் பொட்டு போன்ற அடர் தீவனங்கள், புல் வகைகளைச் சேர்ந்த பசுந்தீவனங்கள் மற்றும் வைக்கோல், சோளத்தட்டை போன்ற உலர் தீவனங்கள் என்று சரிவிகித சமச்சீர் உணவு வழங்க வேண்டும்.இவ்வாறு வழங்கும் போது நல்ல பால் உற்பத்தியுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ஆனால் இன்றைய நிலையில் பெரும்பாலும் மூட்டைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் மாட்டுத் தீவனங்களையே சரிவிகித உணவாக பலரும் வழங்கி வருகின்றனர்.நாங்கள் ஆரம்ப கட்டங்களில் கால்நடைகளின் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஆனைப்புல் (யானைப்புல்) எனப்படும் நேப்பியர் ரக புற்களை வளர்த்து வந்தோம்.தற்போது யானைப் புல்லையும் தீவனக் கம்பையும் கலந்து உருவாக்கப்பட்ட சூப்பர் நேப்பியர் ரக புற்களை வளர்த்து வருகிறோம். 

இந்த ரக புற்களுக்கு பெரிய அளவில் பராமரிப்பு தேவையில்லை.ஆனால் அபரிதமான வளர்ச்சி, மற்றும் சத்துக்களால் பசுந்தீவனங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.இது தானியப் பயிரான கம்பையும் புல் வகையான யானைப் புல்லையும் கலந்து உருவாக்கப்பட்டதால் தானியங்களின் புரதத்தையும் புல்லிலுள்ள கார்போஹைட்ரேட்டையும் ஒன்றாகக் கொண்டுள்ளது.சூப்பர் நேப்பியரிலுள்ள புரதத்தின் அளவு 14 முதல் 18 சதவீதமாக உள்ளது.

இந்த புல் ரகத்தை நடவு செய்த 90-வது நாளிலிருந்து அறுவடை மேற்கொள்ளலாம். இவ்வாறு 5 ஆண்டுகள் வரை பலன் தரக் கூடியதாக உள்ளது. மாட்டுச்சாணம், மாட்டு சிறுநீர், ஆட்டுரம், மீன் அமிலம் போன்றவற்றைப் பயன்படுத்தி முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி மேற்கொள்ளும் போது சுமார் 13 அடி உயரம் வரை வளர்ந்து அண்ணாந்து பார்க்க வைக்கிறது. கால்நடைகளுக்கான தீவனப் பயிர்களில் மிக அதிகமான உற்பத்தித்திறன் கொண்டதாக இது உள்ளது.

எந்த வகை தீவனப்பயிராக இருந்தாலும் ஏக்கருக்கு அதிக பட்சமாக 100 டன் தீவனங்களையே அறுவடை செய்ய முடியும்.ஆனால் சூப்பர் நேப்பியர் புல் ரகத்தின் மூலம் 200 டன் வரை மகசூல் பெற முடிகிறது.மேலும் தண்டுப் பகுதியில் சுனை குறைவாக இருப்பதால் அறுவடை செய்வதில் சிரமங்கள் ஏற்படுவதில்லை.அத்துடன் மிருதுவான இனிப்பு சுவை கொண்டதாக உள்ளதால் கால்நடைகள் வீணாக்காமல் விரும்பி உண்கின்றன.மொத்தத்தில் கால்நடை வளர்ப்போருக்கு பெரிதும் கைகொடுப்பதாக சூப்பர் நேப்பியர் புல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News