ஆன்மிகம்
ரம்மியமான வெளிச்சத்தில் தஞ்சை பெரியகோவிலில் சோதனையாக விளக்குகள் பொருத்தப்பட்டு எரிய விடப்பட்ட காட்சி.

தஞ்சை பெரிய கோவிலில் ராட்சத விளக்குகளை பொருத்தி சோதனை

Published On 2020-09-09 07:10 GMT   |   Update On 2020-09-09 07:10 GMT
மாமல்லபுரத்தை போன்று தஞ்சை பெரிய கோவிலில் ராட்சத விளக்குகளை பொருத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இது பயன்பாட்டுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இந்த கோவில் இருந்து வருகிறது.

இந்த கோவிலில் மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில் ஆகியவை உள்ளன. இது தவிர 216 அடி உயரமுள்ள விமான கோபுரமும் அமைந்து உள்ளன. இங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, நடராஜர் சன்னதிகளும் உள்ளன.

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால குடைவரை கோவில்கள், ரதங்கள், பாறைச்சிற்பங்கள் போன்றவை மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. அதேபோன்று தஞ்சை பெரியகோவிலும் விரைவில் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் ராட்சத விளக்குகள் அமைக்கும் பணிகள் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக நடந்து வருகின்றன. இதற்காக கோவிலின் முன்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகள், முகப்பு பகுதி, கோபுரம் உள்ளிட்ட இடங்களில் மின்இணைப்புகள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

நமது பாரம்பரிய நினைவுச்சின்னத்தை ஒளி வெள்ளத்தில் பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் மின் வயர்கள் கொண்டு செல்லும் பணி, பதிக்கும் பணிகள் முடிவடைந்தன.

தற்போது ஆங்காங்கே விளக்குகளை பொருத்தி அதனை எரிய விட்டு பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரியகோவில் விமான கோபுரம், முகப்பு பகுதி, கோவில் திருச்சுற்று மண்டபம், ராஜராஜன் கோபுரம் பகுதியிலும் விளக்குகளை எரிய வைத்து சோதனை செய்து பார்த்தனர். புராதன சின்னத்தை ரம்மியமான விளக்கு வெளிச்சத்தில் காணும் வகையில் இந்த விளக்குகள் அமைக்கப்படுகின்றன.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “விளக்குகள் பொருத்துவதற்காக மின் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. தற்போது விளக்குகளை ஆங்காங்கே பொருத்தி, வெளிச்சத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் நிரந்தரமாக விளக்குகள் பொருத்தப்படவில்லை. சோதனையாகத்தான் தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் விளக்குகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்” என்றனர்.
Tags:    

Similar News