செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

கொரோனா தொற்று தவறாக நிர்வகிக்கப்பட்டதாக வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு

Published On 2020-10-01 23:04 GMT   |   Update On 2020-10-01 23:04 GMT
இந்தியாவில் கொரோனா தொற்று தவறாக நிர்வகிக்கப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கலானது. அதை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தவறாக நிர்வகிக்கப்பட்டதாக கூறி, விசாரணை நடத்த உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற அதிகார வர்க்கத்தினர், இந்த வழக்கை மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் மூலம் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில், “கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு சரியான நேரத்தில், பயனுள்ள நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க தவறி விட்டது; 1952-ம் ஆண்டு இயற்றிய விசாரணை ஆணையங்கள் சட்டத்தின்படி, இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எல்.என்.ராவ் அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார்.

அவர் தனது வாதத்தில், “கொரோனா தடுப்பு ஆலோசனையை மத்திய உள்துறை அமைச்சகம் பிப்ரவரி 4-ந் தேதி வெளியிட்டும், சர்வதேச விமான பயணிகள் மார்ச் 4-ந் தேதிவரை பரிசோதிக்கப்படவில்லை; கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை கூறியபோது, நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் 1 லட்சம் மக்கள் கூடினர். மொத்த உள்நாட்டு உற்பத்தி இதுவரை இல்லாத வகையில் 23 சதவீதம் சுருங்கியது. கோடிக்கணக்கானோர் வேலை இழந்தனர். பொருளாதாரம் அழிந்தது. கொரோனாவை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை” என கூறினார். தொடர்ந்து மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார்.

ஆனால் நீதிபதிகள், “இது பொது விவாதத்துக்கு உரியது. கோர்ட்டுக்கு உரியது அல்ல. நாங்கள் இதை விசாரிக்க விரும்பவில்லை. இதெல்லாம் அரசு கவனிக்க வேண்டியவை” என கூறி விசாரிக்க மறுத்து விட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு உலக சுகாதார நிறுவனம் பொறுப்பேற்கவும், இந்தியாவில் ஏற்பட்ட இழப்புகளுக்கு சீனா இழப்பீடு தரவும் உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ராமன் கக்கர் என்பவர் தாக்கல் செய்த இந்த வழக்கு, நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சீன அரசுக்கு சம்மன் அனுப்ப எங்களுக்கு அதிகார வரம்பு இல்லை. உலக சுகாதார நிறுவனமும், சீன அரசும் என்ன செய்ய வேண்டும் என்று இந்த கோர்ட்டு எப்படி கூற முடியும்? இந்த கோர்ட்டு, அரசாங்கம் அல்ல. இந்த வழக்கும் விசாரணைக்கு உகந்ததல்ல” என கூறி ஏற்க மறுத்து விட்டனர்.
Tags:    

Similar News