செய்திகள்
வெங்காயம்

டெல்லியில் வெங்காயம் விலை ரூ.100 ஆக உயர்வு

Published On 2019-11-07 05:43 GMT   |   Update On 2019-11-07 05:43 GMT
டெல்லியில் வெங்காயத்தின் விலை ரூ.100 தொட்டது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
புதுடெல்லி:

வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பதுக்கல் காரணமாக தட்டுப்பாடு நிலவுவதால் விலை உயர்ந்த வண்ணமாய் உள்ளது.

மற்ற மாநிலங்களில் வெங்காயத்தின் விலை ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. ஆனால் டெல்லியில் வெங்காயத்தின் விலை ரூ.100 தொட்டது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

டெல்லியில் மிகப்பெரிய காய்கறி சந்தையான ஆசாத்பூர் மண்டி உள்ளிட்ட சந்தைகளில் வரத்து குறைவாக இருப்பதால் தான் விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் ஈரான் நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.


வெங்காய விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பதுக்கல்காரர்களை பா.ஜனதா அரசு பாதுகாப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரீயா ஸ்ரீநாத் கூறியதாவது:-

வெங்காயத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்களை பா.ஜனதா அரசு பாதுகாக்கிறது. அரசின் மோசமான செயல்பாடுகளே விலை உயர்வுக்கு காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News