செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - ரோகித், கோலியின் அதிரடியால் இந்தியா அபார வெற்றி

Published On 2018-07-12 18:28 GMT   |   Update On 2018-07-12 18:28 GMT
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது. #ENGvIND #IndiavEngland
நாட்டிங்காம்:

இங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாட்டிங்காமில் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி  பந்துவீச்சு தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜேசன் ராய் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் தொடர்ந்து ஜோ ரூட்டையும், பேர்ஸ்டோவையும் வீழ்த்தினார். 

5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்சும் ஜோஸ் பட்லரும் ஜோடி சேர்ந்தனர். ஜோஸ் பட்லர் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் 102 பந்தில் அரைசதம் அடித்த கையோடு குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார்.

அதன்பின் வந்த மொயீன் அலி 23 பந்தில் 24 ரன்களும், அடில் ரஷித் 16 பந்தில் 22 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 49.5 ஓவரில் 268 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.



இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 10 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுக்களும், சாஹல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் ஆடினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை தொடங்கினர்.

அணியின் எண்ணிக்கை 59 ஆக இருந்தபோது ஷிகர் தவான் 40 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி ரோகித்துடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.

ஒருபுறம் ரோகித் சர்மா சதமடிக்க, மறுபுறம் விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார். இருவரும் இணைந்து 167 ரன்கள் ஜோடி சேர்ந்தனர். விராட் கோலி 75 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் களமிறங்கினர். இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில், இந்தியா 40.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 137 ரன்னுடனும், ராகுல் 9 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து, இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. #ENGvIND #IndiavEngland
Tags:    

Similar News