செய்திகள்
காய்கறிகள்

காய்கறிகள் தங்குதடையின்றி கிடைக்க எம்.ஜி.ஆர். காய்கறி கொள்முதல் மார்க்கெட் திறப்பு

Published On 2021-05-26 09:40 GMT   |   Update On 2021-05-26 09:40 GMT
மாநகருக்குத் தேவையான அனைத்து காய்கறிகள், பழங்கள் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி கொள்முதல் மார்க்கெட்டில் வந்து சேர்ந்துள்ளது.

கோவை:

கோவை மாநகராட்சி கமி‌ஷனர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் பொது மக்களின் அன்றாட தேவைகளான காய்கறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் எந்தவிதமான தங்குதடையின்றி உடனடியாக அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று சேரவேண்டும் என்ற அறிவுரைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்று காலை அமைச்சர்களால் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தனியார் விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு அவர்கள் வியாபாரம் செய்யும் இடங்களுக்கு வீடு வீடாகச் சென்று காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

பின்னர் நேற்று மாலை முதல் வெளியூர்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் வரவேண்டும் என்ற நோக்கத்துடன் அனைத்து வியாபார பெருமக்களையும் தொடர்பு கொண்டு அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களை வர வையுங்கள் என்று கூறி நேற்று இரவு முதல் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து, தற்போது மாநகருக்குத் தேவையான அனைத்து காய்கறிகள், பழங்கள் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி கொள்முதல் மார்க்கெட்டில் வந்து சேர்ந்துள்ளது.

அவை இன்று காலை அனைத்து இடங்களுக்கும் 165 தனியார் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இது இல்லாமல் உழவர் சந்தைகளில் இருந்து மாநகராட்சிக்குச் சொந்தமான 70 வாகனங்களில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விலையை எந்த ஒரு சூழ்நிலையிலும் ஏற்றம் செய்துவிடக் கூடாது என்பதற்காக இப்பணிகளை செய்து வருகிறோம்.

மேலும் வெளியூர்களில் இருந்து விவசாயிகள் அவர்களுடைய உற்பத்தி பொருட்களை மாநகருக்குள் கொண்டு வந்து ஆங்காங்கே விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் எந்த விதத்திலும் விலை ஏற்றமாகி விடக் கூடாது என்ற நோக்கத்தில் அலுவலர்களை அறிவுறுத்தி தகுந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News