செய்திகள்
ரேஷன் கடை ஊழியர்களை எச்சரித்த எம்.எல்.ஏ., செல்வராஜ்.

புகார் தெரிவித்த மூதாட்டியை காரில் ரேசன் கடைக்கு அழைத்து சென்ற எம்.எல்.ஏ.,

Published On 2021-08-09 09:43 GMT   |   Update On 2021-08-09 09:43 GMT
செல்வராஜ் எம்.எல்.ஏ.,ஆய்வு பணிக்காக வந்த போது கன்னியம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் காரை வழிமறித்து ரேஷன் கடைகளில் ஊழியர்கள் விதிமீறி நடப்பதாக புகார் தெரிவித்தார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை செல்வராஜ் எம்.எல்.ஏ., அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் கருவம்பாளையம் கே.வி.ஆர்., நகரில் உள்ள நகராட்சி மற்றும் உயர்நிலை  பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். 

அங்கு நடைபெற்று வரும் வகுப்பறை கட்டிட பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்கவும், எவ்வாறு பணிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும்  ஆலோசனை வழங்கினார். 

முன்னதாக செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆய்வு பணிக்காக வந்த போது கன்னியம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் காரை வழிமறித்து ரேஷன் கடைகளில் விதிமீறி நடந்து கொள்கின்றனர். நீங்கள் வந்து தட்டி கேட்க வேண்டும் என  எம்.எல்.ஏ.விடம் கூறினார். 

இதையடுத்து ஆய்வு பணிகளை முடித்து விட்டு கன்னியம்மாளை காரில் ஏற்றி கொண்டு சம்பந்தப்பட்ட வேடத்தலங்காடு 4 வது தெரு கருவம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கு அழைத்து சென்றார். அங்கு வேலை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களிடம் விசாரித்தார். 

அப்போது கன்னியம்மாள் ரேஷன் அரிசி தரமில்லாமல் இருப்பதாகவும் கடை ஊழியர்கள் தாக்க வந்ததாகவும் செல்வராஜ் எம்.எல்.ஏ.,விடம் கூறினார். இதையடுத்து கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கிய எம்.எல்.ஏ., கன்னியம்மாளுக்கு வழங்கப்பட வேண்டிய 20 கிலோ அரிசி மற்றும்  தரமில்லாமல் வழங்கப்பட்ட 20 கிலோ அரிசியை மாற்றி 40 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்தார். 

மேலும் பொதுமக்களுக்கு பொருட்களை முறையாக வழங்குமாறு ஊழியர்களை எச்சரித்தார். செல்வராஜ் எம்.எல்.ஏ.,வின் இந்த செயலை கண்டு அனைவரும் பாராட்டினர்.  
Tags:    

Similar News