ஆன்மிகம்
திருவண்ணாமலையில் கோவிலுக்குள் செல்ல முடியாததால் பக்தர்கள் வேதனை

திருவண்ணாமலையில் கோவிலுக்குள் செல்ல முடியாததால் பக்தர்கள் வேதனை

Published On 2020-11-30 04:22 GMT   |   Update On 2020-11-30 04:22 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளே செல்வதற்கும், பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் பெரும் வேதனை அடைந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று கோவிலுக்குள் நடைபெறும் பரணி மற்றும் மகா தீப நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகத்தினால் தடை செய்யப்பட்டது. மேலும் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

மகா தீபத் தன்று தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம்.

கோவிலுக்கு உள்ளே செல்வதற்கும், பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் பெரும் வேதனை அடைந்தனர்.

இதுகுறித்து வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் கூறுகையில், பல வருடங்களாக திருவண்ணாமலைக்கு நாங்கள் வருகிறோம். எந்த ஆண்டும் கோவிலுக்குள் செல்வதற்கும், கிரிவலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது கிடையாது. இதனை நாங்கள் கேள்விபட்டது கூட கிடையாது. மகா தீபத்தன்று கோவிலுக்குள் சென்று தீப தரிசனம் செய்வது வழக்கம். 

அதன்பின்பு கிரிவலம் செல்வோம். தற்போது உள்ள தடை உத்தரவால் கோவிலுக்குள் சென்று தீபதரிசனத்தை காண முடியவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. எங்களை போல் ஏராளமான பக்தர்கள் இந்த ஆண்டு மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இருப்பினும் கோவிலுக்கு வெளியே இருந்து வணங்கி, மலையில் தீப தரிசனத்தை கண்டது மனதிற்கு சற்று ஆறுதலை தந்துள்ளது என்றனர்.

Tags:    

Similar News