செய்திகள்
பாபநாசம் அகஸ்தியர் அருவி பகுதியில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்

தாமிரபரணியில் கடும் வெள்ளம்- கரையோர மக்கள் வெளியேற்றம்

Published On 2019-11-30 09:27 GMT   |   Update On 2019-11-30 09:27 GMT
தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் தண்ணீர் சூழ்ந்தால் வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 3 மாவட்டங்களிலும் விட்டு விட்டு சாரல் மழையும், கனமழையும் பெய்தது. இதன் காரணமாக தென் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது.

இதனால் அணை பாதுகாப்பை கருதி நேற்று வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலையில் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. நள்ளிரவில் சிறிது நேரம் சாரல் மழையும், சிறிது நேரம் கனமழையும் என மாறி மாறி பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இடை விடாது மழை கொட்டியது.

கடலோர பகுதிகளிலும் கனமழை பெய்தது. தென் மாவட்டங்களில் அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் இன்று காலை வரை 110 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் பாபநாசம் அணைக்கு தண்ணீர் கரைபுரண்டு வந்தது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு இன்று காலை வினாடிக்கு 14204 கன அடி தண்ணீர் அணைக்கு வந்ததால் பாபநாசம் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இன்று காலை வினாடிக்கு 14270 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கல்யாண தீர்த்தம், அகஸ்தியர்பட்டி அருவிகளில் தண்ணீர், பாறை தெரியாமல் வெள்ளமாக கொட்டியது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று அகஸ்தியர் அருவி பாலம், குறுக்குத்துறை முருகன் கோவில் மண்டபம் ஆகியவை தண்ணீரில் மூழ்கின. இன்று காலை ஒரே நேரத்தில் 14 ஆயிரம் கன அடிக்கு மேல் திறக்கப்பட்டதால் பாபநாசம் படித்துறை யாரும் குளிக்க முடியாத அளவுக்கு மூழ்கியுள்ளது.

இதுபோல அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி பகுதியிலும் அனைத்து படித்துறைகளும் மூழ்கியுள்ளன. தாமிரபரணி ஆற்றில் காட்டாற்று வெள்ளமும் கலந்து ஓடுவதால் நெல்லை பகுதியில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோவில் முழுவதுமாக மூழ்கியது. கோவிலின் கோபுரம் மட்டுமே தெரிகிறது.

தைப்பூச மண்டபம் உள்பட கரையோர படித்துறை மண்டபங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.

இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக்கு யாரும் குளிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் தண்ணீர் சூழ்ந்தால் வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இதனால் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதி மக்கள் இன்று தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர். தாமிரபரணி ஆறு செல்லும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்கள் சார்பாக அந்தந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

இதுவரை மழை காரணமாக மணிமுத்தாறு அணைக்கு குறைந்த அளவு தண்ணீரே வந்து கொண்டிருந்தது. நேற்று பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 989 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 35 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று 80 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று 84.80 அடியாக உள்ளது. இதுபோல மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் விபரம் அடிகளில் வருமாறு:-

பாபநாசம்-142.60 (143), சேர்வலாறு-147.37 (156), மணிமுத்தாறு-84.80 (118), கடனாநதி- 84 (85), ராமநதி- 80.50 (84), கருப்பாநதி- 70.21 (72.10), குண்டாறு- 36.10 (36.10), அடவிநயினார்- 132.22 (132.22), கொடுமுடியாறு-34 (52.50), வடக்கு பச்சையாறு-13.50 (50), நம்பியாறு-15.25 (22.96) இதில் அடைப்பு குறிக்குள் அணையின் முழு கொள்ளளவான நீர்மட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது 11 அணைகளில் 7 அணைகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. மற்ற 4 அணைகளில் குறைந்த அளவே நீர்மட்டம் உள்ளது.

களக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுபோல களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து களக்காட்டில் ஓடும் நாங்குநேரியான் கால்வாய், பச்சையாறு, உப்பாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாங்குநேரியான் கால்வாயில் கரைகளை தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.



களக்காடு-சிதம்பரபுரம் செல்லும் சாலையில் நாங்குநேரியான் கால்வாயில் உள்ள தரைபாலம் வெள்ளத்தில் மூழ்கியது, இதனைத்தொடர்ந்து அங்கு போக்குவரத்து தடை பட்டுள்ளது. களக்காடு பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பியதை அடுத்து குளங்களுக்கு செல்லும் தண்ணீரும் ஆறுகளில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. களக்காடு மலையில் உள்ள அருவி, நீரோடைகளிலும் கடும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. தலையணையில் காட்டாற்று வெள்ளம் கட்டுக்கடங்காமல் கரைபுரள்கிறது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி காட்டாற்று வெள்ளம் சீறி பாய்ந்து செல்கிறது.

திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. திருமலைநம்பி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் தொடர்ந்து மழை நீடிப்பதால் களக்காடு ஆறுகளில் கரை புரளும் வெள்ளப்பெருக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையொட்டி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்கும் படி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தற்போது பெய்துவரும் கன மழையில் இந்த பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி வருகிறது. தற்போது திருச்செந்தூர் ஆவுடையார் குளம் நிரம்பி மறுகால் விழுந்து தண்ணீர் கடலுக்கு செல்கிறது. இதனால் வாய்க்கால் நிரம்பி வழிகிறது.

இதன் உபரி நீர் மற்றும் மழை நீர் குமாரபுரம் ஊருக்குள் புகுந்து வீட்டைச்சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது, மழை நீர் வீட்டுக்குள் புகுந்துள்ளதால் இந்த பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியேவர முடியாத நிலை உள்ளது. பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் ஊர் தலைவர் கோடிஸ்வரன் தலைமையில் பொதுமக்கள் தண்ணீரை வடியவைக்க முயற்சி செய்துவருகின்றனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பாபநாசம்-110, ராதாபுரம்-78, சேர்வலாறு-73, மணிமுத்தாறு-65.4, நம்பியாறு-50, கொடு முடியாறு-45, கருப்பாநதி-46, களக்காடு-46.4, அம்பை-41.4, பாளை-38.6, நெல்லை-34, கடனாநதி-35, நாங்குநேரி-35, சேரன்மகாதேவி-33, தென்காசி-30.3, ஆய்க்குடி-28.4, அடவிநயினார்-26, ராமநதி-25, குண்டாறு-22, சிவகிரி-19, செங்கோட்டை-16, சங்கரன்கோவில்-5

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

குலசேகரப்பட்டினம்-77, காயல்பட்டினம்-22, சாத்தான்குளம்-66, கடம்பூர்64, ஓட்டப்பிடாரம்-54, திருச் செந்தூர்-50, கயத்தாறு-49, மணியாச்சி-48, வைப்பார் -34, எட்டயாபுரம்-31, கோவில்பட்டி-29, விளாத்திகுளம்-19, கீழ அரசடி-19, தூத்துக்குடி-18.2, கழுகுமலை-15, ஸ்ரீவைகுண்டம்-13.1, காடல்குடி-12, சூரங்குடி-10, வேடநத்தம்-7.

Tags:    

Similar News