உள்ளூர் செய்திகள்
பாதயாத்திரை சென்ற பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்

Published On 2022-01-11 09:17 GMT   |   Update On 2022-01-11 09:17 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்.
திருச்செந்தூர்:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தைப்பூச திருவிழாவிற்கு பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டதால் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தைப்பூசத் திருவிழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, பறவைக் காவடி, சர்ப்பக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், அலகு வேல்குத்தியும் பாதயாத்திரையாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். 

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக அரசு ஜனவரி 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்களுக்கு செல்ல தடை விதித்துள்ளது. 

இதனால் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்த வண்ணம் உள்ளனர். 

கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News