ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணிய கால பிரமோற்சவ விழா கொடியேற்றம்

Published On 2021-01-05 06:34 GMT   |   Update On 2021-01-05 06:34 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணிய கால பிரமோற்சவ விழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் மாதங்களான சித்திரை முதல் பங்குனி வரை உள்ள 12 மாதங்களும் கிரகங்களின் சஞ்சாரங்களை கொண்டு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இதில் உத்ராயண புண்ணிய கால கொடியேற்ற விழாவும் ஒன்று. 12 மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலமாகவும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமாகவும் ஆகம நூல்கள் கூறுகின்றன.

தெற்கு நோக்கி நகரும் காலத்தை தட்சணாயின புண்ணிய காலம் என்றும், வடக்கு நோக்கி நகரும் காலத்தை உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைப்பார்கள். வடக்கு நோக்கி நகரும் காலத்தை வேதநூல்கள் சிறப்பான காலம் என்று கூறுகிறது.

உத்ராயண புண்ணிய காலத்தை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான உற்சவம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கொடிமரம் முன்பு விநாயகர் மற்றும் அம்பாளுடன், சந்திரசேகரர் எழுந்தருளினார்.

இதைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்று விழா காலை 7.05 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பல மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர். விழாவை முன்னிட்டு இன்று முதல் தினமும் காலை மற்றும் இரவு சாமி, அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

10-வது திருநாளான தை மாத முதல் நாள் ஜனவரி 14-ந்தேதி (வியாழக்கிழமை) தாமரைகுளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.
Tags:    

Similar News