ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் இலவச டோக்கன் வாங்க முண்டியடித்த பக்தர்கள்

Published On 2020-11-01 08:23 GMT   |   Update On 2020-11-01 08:23 GMT
திருப்பதியில் இலவச டோக்கன் வாங்க பக்தர்கள் முண்டியடித்தனர். 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இலவச தரிசனத்துக்கான அனுமதியும் தொடங்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் மையத்தில் டோக்கன்கள் வழங்கப்படுகிறது. தினமும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாள் தரிசனத்துக்கும் அதற்கு முந்தைய நாள் இரவு 9.45 மணிக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

அதன்படி சனிக்கிழமை தரிசனத்துக்கான டோக்கன் பெறுவதற்காக வரிசையில் பக்தர்கள் முண்டியடித்தனர். 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என்றதால் பல பக்தர்கள் வரிசையிலிருந்து விலகி தடுப்புகளைத் தள்ளி முன் வந்தனர். அந்த நேரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில், தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த வேலூரைச் சேர்ந்த சுஜாதா சோமசில்லி என்ற பெண் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
Tags:    

Similar News