செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து நோயாளி தப்பி ஓட்டம்

Published On 2021-04-30 10:26 GMT   |   Update On 2021-04-30 10:26 GMT
பட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து தப்பி ஓடிய நோயாளி மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் புதுரோட்டில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையம் கடந்த 22-ந் தேதி திறக்கப்பட்டது. அங்கு 55 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மையத்தில் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க கொரோனா நோயாளி ஒருவர் கடந்த 24-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 26-ந் தேதி இரவு யாருக்கும் தெரியாமல் அந்த மையத்தின் பின்பக்க வாசலில் அடைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகளை பிரித்து அதன் வழியாக தப்பி சென்றார்.

இந்த நிலையில் அன்று நள்ளிரவு பட்டுக்கோட்டை பஸ்நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து தப்பிய நபர் அமர்ந்திருப்பது தெரிய வந்தது.

அவரிடம் போலீசார் விசாரித்தபோது தான் ‘காற்று வாங்க’ வந்ததாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரை உடனடியாக கொரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்து சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதனிடையே கொரோனா பாதித்த நபர் சிகிச்சை மையத்தில் இருந்து தப்பி ஓடியது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சரவணக்குமார் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அதன் பேரில் பட்டுக்கோட்டை போலீசார் சிகிச்சை மையத்தில் இருந்து தப்பிய நோயாளி மீது இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 270, 271, 188 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவு 51பி ஆகிய 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News