செய்திகள்
பராமரிக்கப்படாமல் உள்ள மயானத்தை படத்தில் காணலாம்.

கோயம்பள்ளி ஊராட்சியில் சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட குளம் தூர்வாரப்படுமா?

Published On 2019-12-14 18:07 GMT   |   Update On 2019-12-14 18:07 GMT
கரூர் அருகேயுள்ள கோயம்பள்ளி ஊராட்சியில் சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட குளம் தூர்வாரப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்:

கரூர் மாவட்டம் தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோயம்பள்ளி ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புகளிலிருந்து வழிந்தோடும் மழைநீரை கால்வாய் மூலமாக கொண்டு சென்று சேகரிக்கும் விதமாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக குளம் அமைக்கப்பட்டது. இந்த குளத்து நீரை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் படித்துறை அமைக்கப்பட்டிருந்தன. மழைகாலத்தில் இந்த குளம் நீர்நிரம்பி இருக்கிறபோது, விவசாயிகள் கால்நடைகளை குளிப்பாட்டுவது, துணி துவைத்து குளிப்பது உள்ளிட்டவற்றுக்காக இந்த குளத்தை பயன்படுத்தினர். நாளடைவில் இந்த குளம் சரிவர பராமரிக்கப் படாததன் காரணமாக நீர்வழிப்பாதைகள் மண்மூடி காணப்படுகிறது. மேலும் குளத்தினை சுற்றிலும் சீமைக்கருவேலமரங்கள் முளைத்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் படித்துறை வழியாக குளத்தினுள் இறங்க முடியாத நிலை உள்ளது. மேலும் மழைபெய்த போதிலும் நீர்வழிந்தோடி குளத்திற்கு வர உரிய வழிவகை இல்லாத நிலை இருக்கிறது. எனவே மழைநீரை சேமிப்பதற்கு ஏதுவாக இந்த குளத்தை தூர்வார அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தின்கீழாவது உரிய நிதி ஒதுக்கீடு செய்து இதனை பராமரிக்க வேண்டும்.

மேலும் அந்த குளத்தையொட்டியவாறே ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் மயான கட்டிடம் கட்டப்பட்டது. எனினும் இதுவும் பராமரிக்கப்படாததால் சிலர் ஆடு, மாடுகளை அதனுள் கட்டி விட்டு செல்கின்றனர். மேலும் சிலர் இயற்கை உபாதை கழிப்பது உள்ளிட்டவற்றுக்காகவும் இந்த மயான வளாகத்தை பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும் மயானத்தையொட்டி அடிபம்பானது பழுதடைந்து வேண்டாத செடிகொடிகளுக்கிடையே உள்ளது. எனவே மயான கட்டிட வளாகத்தில் தூய்மை பணியை மேற்கொண்டு, அடிபம்பினை சீர் செய்து அதனை பயன்படுத்திட உரிய வழிவகை செய்திட வேண்டும்.

கோயம்பள்ளியானது அமராவதி ஆற்றங்கரையினை ஒட்டிய பகுதியாக உள்ள போதும் கூட கோடைக் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். எனவே அங்குள்ள பழைய குடிநீர் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்ற வேண்டும். மேலும் வீடுகளில் மழைநீர் சேகரிப்புஅமைப்பு ஏற்படுத்த விழிப்புணர்வு மேற்கொள்ள அதிகாரிகள் முன்வர வேண்டும். மேலும் இங்கு குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சேகரித்து குப்பை தொட்டியினுள் போட்டு எரியூட்டும் திட்டமும் தொய்வடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான குப்பை தொட்டிகள் சிதிலமடைந்து கிடக்கின்றன. எனவே இதனை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News