லைஃப்ஸ்டைல்
உடற்பயிற்சி

உடற்பயிற்சியின் புதிய பரிணாமம் டான்ஸ் பிட்னெஸ்

Published On 2020-11-13 03:26 GMT   |   Update On 2020-11-13 03:26 GMT
டான்ஸ் பிட்னெஸ் உடற்பயிற்சியின் புதிய பரிணாமம். உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டே உடலை வலுப்படுத்தும் வித்தை இதில் கற்றுத்தரப்படுகிறது.
முற்றிலும் அழகுப்பெண்களின் வால் போஸ்டர்கள் அடங்கிய கண்ணாடி அறை. பார்க்கவே பரவசமூட்டக்கூடியதாக இருக்கும் அந்த பிரமாண்டமான நடன அறையில் பெண்கள் வரிசைகட்டி நிற்பார்கள். நடனம் ஆடுவதற்காக அவர்கள் அணிந்திருக்கும் உடைகள் அவர்களை கூடுதல் அழகாகக்காட்டும். அவர்களுக்கு முன்னால் பயிற்சியாளர் ஒருவர் வந்து நிற்பார். சிறிது நேரத்தில் லத்தீன் இசை ஒலித்து, அந்த அரங்கத்தையே உற்சாகமாக்கும். கேட்பவர்களை எல்லாம் துள்ளல் போடவைக்கும் இசை அது.

இசைக்கு ஏற்றபடி அந்த அழகுப் பதுமைகள் ஆடத்தொடங்க, பயிற்சியாளர் குரலை உயர்த்தி ‘கமான் ஸ்பீட் அப்.. ஒன்..டூ..த்ரி! த்ரி ரெய்ஸ்.. த்ரி டவுன்’ என்று கூறியபடி, எப்படி ஆடவேண்டும் என்பதை தானும் ஆடிக்காட்டுவார். எல்லோருமே ரசித்து, கை, கால், தலை உடல் அனைத்தையும் அசைத்து ஆனந்தமாய் ஆடுவார்கள். அதே வேகத்தோடு 20 நிமிடங்கள் தொடரும் ஆட்டம், பின்பு வேகத்தை குறைக்கிறது. பத்து நிமிடங்கள் மிதமான வேகத்தில் ஆடிவிட்டு, மூச்சு வாங்க நிற்பார்கள். இசையும் நிறுத்தப்படுகிறது. பின்பு பூத்தூவல் ‘டவல்’ கொண்டு வியர்வையை துடைத்துவிட்டு, ஒரு மிடறு தண்ணீர் பருகிவிட்டு, ஆளாளுக்கு ‘டாடா’ காட்டிவிட்டு பிரிவார்கள். சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்கள் இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நாட்களில் நடக்கும் அன்றாட காட்சி இது.

இதன் பெயர், டான்ஸ் பிட்னெஸ். இது உடற்பயிற்சியின் புதிய பரிணாமம். உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டே உடலை வலுப்படுத்தும் வித்தை இதில் கற்றுத்தரப்படுகிறது. சல்சா, ஜும்பா, டாப் டான்ஸ், பிளமிங்கோ, ரும்பா, பாலிவுட் டான்ஸ், ஏரோபிக்ஸ் டான்ஸ் போன்ற பலவித நடனங்கள் கலந்த கலவையாக இது இருக்கிறது. சாலையில் வாகன இரைச்சலுக்கு மத்தியில் ‘வாக்கிங்’ செல்ல முடியாதவர்களும், ஜிம்மில் இயந்திரங்களோடு தன் உடல் சக்தியை காட்டி மேம்படுத்த விரும்பாதவர்களும் ரசித்து ஆடி இந்த ‘டான்ஸ் பிட்னெஸ்’ சில் ஈடுபடுகிறார்கள்.

முன்பெல்லாம் பிட்னெஸ் நடனம் என்றால் அது ‘ஏரோபிக்ஸ்’ மட்டுமே என்ற எண்ணமே இருந்தது. பின்பு தான் அதிரடியாக வெளிநாட்டில் இருந்து உள்ளே புகுந்தது, ஜும்பா. இசையும்-இயல்பாக வளைந்து நெளிந்து ரசித்து ஆடும் ஆட்டமும் கலந்த ஜும்பா மிக விரைவாகவே பெண்களை கவர்ந்துவிட்டது. பெருநகரத்து பெண்கள் அதை ரசித்து ஆடத் தொடங்கினார்கள். சல்சா, ஹிப்ஹாப், ஜாஸ் போன்ற நடனங்களையும் பெண்கள் விரும்பி கற்று, பயிற்சி பெறுகிறார்கள்.

முறைப்படுத்தப்பட்ட இத்தகைய தொடர்ச்சியான நடனப் பயிற்சிகளால், உடல் எடை குறையும். எலும்புகள் பலமடையும். தசைகள் வலுப்பெறும். உடலின் சமச்சீரான தன்மை மேம்படும். அதோடு அன்றன்று ஏற்படும் மன அழுத்தமும் காணாமல் போய்விடும். அதனால் உடலும், மனமும் ஆரோக்கியமும் உற்சாகமும் அடைகிறது.

“முதலில் எனக்கு இந்த பயிற்சி மீது நம்பிக்கை குறைவாகத்தான் இருந்தது. பின்பு என்னோடு பயிற்சி பெறுபவர்களுடன் நட்புணர்வு ஏற்பட்டது. அவர்களோடு சேர்ந்து நடனமாடியபோது உற்சாகம் பிறந்தது. நடனப் பயிற்சி முடிந்து வீடு திரும்பும்போது உடலே ஒரு இறகுபோல் மென்மையாகிவிட்டதைப்போல் உணர்ந்தேன். அது ஒரு விவரிக்க முடியாத அனுபவம்”- என்கிறார், இந்த பயிற்சியை பெறும் குடும்பத்தலைவி சிந்தியா.

இத்தகைய ‘பிட்னெஸ் டான்ஸ்’ களில் மிக அதிகமாக கால் தசைகள் பயன்படுத்தப்படுகின்றன. கைகளிலும், கால்களிலும் உள்ள மூட்டுப்பகுதிகள் மற்றும் இடுப்பும் ஒருங்கிணைந்து நன்றாக செயல்படுகின்றன. நடனத்தில் கால்களை உயர்த்தி தூக்கிப் பிடிக்கும்போது முக்கியமான தசைகள் மட்டுமின்றி, சிறிய தசைநார்களும் நன்றாக இயங்கி அதிக செயல்திறனைப்பெறுகின்றன. தொடர்ந்து இந்த பயிற்சிகளை பெறும்போது, விரும்பியபடி எல்லாம் உடலை வளைக்கவும், நெகிழ வைக்கவும் முடியும். இதனால் உச்சி முதல் பாதம் வரை வலுப் பெறுகிறது.

இசையில் மூழ்கி, அதற்கு தக்கபடி நடனத்தை ஆடும்போது மனதில் சந்தோஷம் எழுகிறது. அது தொடர்பான ஹார்மோன்கள் சுரந்து, உடல் முழுவதும் புத்துணர்ச்சியை உருவாக்குகிறது. இத்தகைய நடனங்கள் இதய தசைகளை வலுப்படுத்துவதால் இதய நோய்களால் ஏற்படும் பாதிப்பும் குறைகிறது.

இந்த பிட்னெஸ் டான்ஸ் பயிற்சியை மேற்கொள்ளும் 50 வயது பெண்மணியான ரக்‌ஷனா, “நான் அளவுக்கு அதிகமான உடல் எடை கொண்டிருந்தேன். எடையை குறைக்க எத்தனையோ வழிமுறைகளை மேற்கொண்டேன். அவை எதையுமே அதிக நாட்கள் என்னால் செய்ய முடியவில்லை. அத்தனையும் எனக்கு மனச்சோர்வையே தந்தன. இந்த பிட்னெஸ் டான்ஸ் பற்றி கேள்விப்பட்டபோது, எனக்கு இதில் அதிக ஈடுபாடு எதுவும் தோன்றவில்லை. ஆனாலும் இதையும் செய்து பார்ப்போமே என்ற எண்ணத்தோடு தான் இதில் ஈடுபட்டேன். ஒரு வாரத்திலே எனக்கு இதில் நம்பிக்கை உருவாகி விட்டது. மிகுந்த உற்சாகத்தோடு இதை செய்கிறேன். உடல் எடை குறைந்ததோடு என் வாழ்க்கைமுறையே இதனால் மாறிவிட்டது. எனக்கு இப்போது தன்னம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது” என்கிறார்.

உடலில் இருக்கும் தேவையற்ற கலோரிகளை எரிக்கும் ஆற்றல் இந்த பயிற்சிக்கு இருக்கிறது. 60 கிலோ எடைகொண்ட ஒரு பெண், 30 நிமிடங்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டால் 250 முதல் 300 கலோரி உடலில் இருந்து செலவாகிவிடும். அதே நபர் அதே அளவு நேரம் நடக்கும்போது 150 கலோரியும், ஓடும்போது 300 கலோரியும் செலவாகும். நீந்தும்போது 240 கலோரியும், சைக்கிளிங் செய்யும்போது 240 கலோரியும் வெளியாகும். இவைகளோடு ஒப்பிடும்போது ‘பிட்னெஸ் டான்ஸ்’ ரசித்து செய்யும் பயிற்சியாகும். அதனால் இது ஆனந்தமான அனுபவத்தை தரும். அதிகமான அளவிலான கலோரியை செலவிட வைப்பதில் ஜும்பா நடனம் முதலிடத்தில் இருக்கிறது.

ஜும்பா, பெண்கள் அதிகம் விரும்பும் உடற்பயிற்சி நடனமாக இருக்கிறது. ஹிப் ஹாப், சல்சா,டாம்கோ, சோக்கா போன்ற பலவகையான நடனங்களின் கலவை இதுவாகும். மிக வேகமாக இதனை ஆடவேண்டும். அதனால் கலோரியை எரிப்பதிலும் முன்னிலை வகிக்கிறது. இதயம், முதுகு, இடுப்பு பகுதியை இது அதிகம் வலுப்படுத்தும், அதனால் இதனை ஆடும் பெண்கள் கட்டுக்குலையாத உடலைப் பெறுகிறார்கள்.

சல்சா நடனம் இடுப்பு, கை, தோள் போன்ற பகுதிகளுக்கு அதிக வலுவை தரும். உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்கும். மன அழுத்தத்திற்கும் நல்ல மருந்து.

கொரோனாவால் வீடுகளுக்குள் பெண்கள் முடங்கிக்கிடக்கும் இந்த நாட்களில், இத்தகைய நடன வீடியோக்களை பார்த்து வீட்டிலே பயிற்சி பெறலாம். ஆனாலும் தொடக்கத்தில் பயிற்சியாளர் ஒருவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வது நல்லது.
Tags:    

Similar News