செய்திகள்
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நலத்திட்ட உதவிவழங்கிய போது எடுத்தபடம்

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் பாடுபட வேண்டும் - பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

Published On 2021-02-25 20:50 GMT   |   Update On 2021-02-25 20:50 GMT
சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
அனுப்பர்பாளையம்:

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி வடக்கு தொகுதிக்குட்பட்ட 10 ஊராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஊராட்சி பகுதிகளில் உள்ள 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ.500 மதிப்பிலான வேட்டி, சேலை, தாம்பூலத்தட்டு வழங்கப்படுகிறது.

இதற்கான விழா பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் மாநகர் மாவட்ட செயலாளரும், சட்டசபை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 10 ஊராட்சிகளில் ரூ.71 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் ஒருசில மாதங்களில் பணிகள் நிறைவடைந்து ஊராட்சி பகுதிகளுக்கு பவானி குடிநீர் வந்தடையும். கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்களை தேடித்தேடி அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் எம்.எல்.ஏ., கிடைத்ததற்கு தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

எனவே தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் சரியாக கொண்டு சேர்த்து, வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்க அனைவரும் அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பெருமாநல்லூர் நால்ரோட்டில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு, ஜெயலலிதா படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாநில அமைப்பு செயலாளர் சி.சிவசாமி, மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஜான், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சொர்ணாம்பாள், பொங்குபாளையம் ஊராட்சி தலைவர் சுலோக்சனா வடிவேல், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மஹாராஜா, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.எம்.பழனிசாமி, பாசறை செயலாளர் சந்திரசேகர், அ.தி.மு.க. நிர்வாகிகள் சதீஷ், வடிவேல், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News