செய்திகள்
புத்தாண்டு கொண்டாடுவதற்காக புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுவை கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் மீது தடியடி

Published On 2021-01-01 08:27 GMT   |   Update On 2021-01-01 08:27 GMT
புதுவை கடற்கரை சாலையில் போலீஸ் தடையை மீற முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.
புதுச்சேரி:

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் பிரமாண்டமாக நடைபெறும்.

புத்தாண்டை வரவேற்க நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவார்கள். வழக்கமாக புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் லட்சத்துக்கும் மேலாக உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலையில் கூடுவார்கள்.

கடற்கரை சாலையில் இரவு 1 மணி வரை கொண்டாட்டத்தை முடித்து திரும்பி செல்வது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற அனுமதி அளிக்கப்படுமா? என்பது கேள்விக்குறியானது.

அதோடு மற்ற பிரச்சினைகளை போல புத்தாண்டு கொண்டாட்ட விவகாரத்திலும் கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையே மோதல் ஏற்பட்டது. ஓட்டல்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

இதனால், இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்தது. இருப்பினும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அதிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

மேலும், பல கெடுபிடிகளுடன் கடற்கரை சாலையில் மக்கள் கூட அனுமதி அளிக்கப்பட்டது. சுமார் 1½ கி.மீ. தூரமுள்ள கடற்கரை சாலை 10 மண்டலமாக பிரிக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஒரு மண்டலத்துக்குள் வந்தவர்கள் மற்றொரு இடத்துக்கு செல்ல முடியாதபடி தடுக்கப்பட்டிருந்தது. இதனால் குறிப்பிட்ட இடத்தில் தங்க விருப்பமின்றி மக்கள் வெளியேறினார்கள்.

இரவு 8 மணி நிலவரப்படி கடற்கரை சாலையில் 2 ஆயிரத்துக்கும் குறைவான மக்களே இருந்தனர். அடுத்த 2 மணி நேரத்தில் மக்கள் வரத்து அதிகரித்தது.

இருப்பினும் போலீசார் கடற்கரைக்கு வந்தவர்களை அதிகபட்சம் ஒரு மண்டலத்துக்குள் 1000-க்கும் குறைவானவர்களையே அனுமதித்தனர். மற்றவர்களை வேறு வழியாக அடுத்த மண்டலத்துக்கு செல்ல அறிவுறுத்தினார்கள்.

அதை ஏற்காமல் போலீஸ் தடையை மீற முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் ஆண்களும் பெண்களும் பயந்து ஓடினார்கள். சரியாக புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது, கூடியிருந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சத்தமிட்டு புத்தாண்டை வரவேற்றனர்.

இதனையடுத்து, அவர்களை கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், யாரும் நகரவில்லை. இதனால் போலீசார் லத்தியை தரையில் அடித்தும் மக்களை அடிப்பது போல் வீசியும் விரட்டினர்.

10 நிமிடத்தில் கடற்கரை சாலையில் இருந்த மக்களை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.இதனால் 12.10 மணியளவில் கடற்கரை சாலை வெறிச்சோடியது. சரியாக 12.15 மணிக்கு துப்புரவு தொழிலாளர்கள் கடற்கரை சாலையை சுத்தம் செய்ய தொடங்கினர்.

கொரோனா தொற்றை தடுக்க கட்டுப்பாடுகளை போலீசார் கடுமையாக விதித்தது புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை களை இழக்க செய்தது.

Tags:    

Similar News