உள்ளூர் செய்திகள்
வெங்கையா நாயுடு

வெங்கையா நாயுடு சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்- கோவைக்கு நாளை வருகிறார்

Published On 2022-05-14 05:39 GMT   |   Update On 2022-05-14 10:00 GMT
துணை ஜனாபதி வருகையை முன்னிட்டு 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
கோவை:

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் குன்னூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று மாலை கோவை வருவதாக இருந்தது.

இந்த நிலையில் அமீரக அதிபர் சேக் கலீபா மரணம் அடைந்ததை தொடர்ந்து, இந்தியாவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இதன் காரணமாக துணை ஜனாதிபதியின் ஊட்டி வருகை மற்றும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று கோவை வருவதாக இருந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை 4.30 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார்.

அங்கிருந்து, கார் மூலம் ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் அவர், நாளை இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.

நாளை மறுநாள்(16ந் தேதி) காலை கோவையில் இருந்து துணை ஜனாதிபதி ஊட்டிக்கு புறப்படுகிறார். நேராக குன்னூர் வெலிங்டன் செல்லும் அவர் அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர் அவர் ஊட்டி ராஜ்பவனுக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.

துணை ஜனாபதி வருகையை முன்னிட்டு 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

முன்னதாக துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஊட்டியில் வாகன ஒத்திகையில் ஈடுபட்டனர். ஊட்டி தீட்டுக்கல் தளத்தில் இருந்து, படகு இல்ல சந்திப்பு, கலெக்டர் அலுவலக பிரதான சாலை வழியாக 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன.

வாகனங்கள் சென்ற வழி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

துணை ஜனாதிபதி ஹெலிகாப்டரில் பயணிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுவதால், அதனையொட்டி ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடந்தது.

துணை ஜனாதிபதி கோவை வருகையை முன்னிட்டு நாளை மாலை அவினாசி சாலையில் கனரக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -

துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு நாளை மாலை கோவைக்கு வருகிறார். மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை அவினாசி சாலை மற்றும் இணைப்பு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதேபோன்று நாளை மறுநாள் காலை காளப்பட்டி, அவினாசி சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகையால் விமான, பஸ் நிலையம் செல்பவர்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு அல்லது மாற்று வழியில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே இந்த 2 நாட்களில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News