செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக அலை வீசுகிறது - ஆரணியில் அன்புமணி பேச்சு

Published On 2021-04-03 08:59 GMT   |   Update On 2021-04-03 08:59 GMT
தி.மு.க. கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக உள்ள மு.க.ஸ்டாலின், ஒரு அரசியல் வியாபாரி என ஆரணியில் நடந்த பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பிரசாரம் செய்தார்.

“அ.தி.மு.க. கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக உள்ள பழனிசாமி, ஒரு விவசாயி, தி.மு.க. கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக உள்ள மு.க.ஸ்டாலின், ஒரு அரசியல் வியாபாரி.

இந்த தேர்தல் ஒரு விவசாயிக்கும், ஒரு அரசியல் வியாபாரிக்கும் இடையே நடைபெறும் தேர்தல். விவசாயிகள், பாட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் என நெற்றில் வியர்வையை சிந்தும் அனைவரும் நம் பக்கம் உள்ளனர்.

ஏசி அறையில் உள்ளவர்கள் தி.மு.க. பக்கம் உள்ளனர். அவர்கள் தொழிலதிபர்கள், முதலாளிகள். விவசாயி வெற்றி பெற வேண்டும். முதலமைச்சராக வர வேண்டும் என ஸ்டாலின் துடிக்கிறார். எனது தம்பிகள் விடமாட்டார்கள். முதலமைச்சராக வர தகுதி வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் என்ற ஒரே தகுதிதான் ஸ்டாலினுக்கு உள்ளது. வேறு எந்த தகுதியும் இல்லை. விவசாயி என்ற தகுதி பழனிசாமிக்கு உள்ளது.

சமூக நீதி அடிப்படையில்தான், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தது. 40 ஆண்டுகால பா.ம.க. நிறுவனர் ராமதாசின் உழைப்பு, 21 பேரது உயிர் தியாகத்துக்கு வன்னியர் சமூகத்துக்கு முதற் கட்டமாக 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கிடைத்துள்ளது.

பீகாரில் இருந்து பிரசாந்த் கிஷோர் என்பவரை அழைத்து வந்து, அவருக்கு ரூ.700 கோடி கொடுத்து, என்னை எப்படியாவது முதலமைச்சராக்குங்கள் என ஸ்டாலின் கேட்கிறார்.

தனது கட்சியை வழி நடத்த பிரசாந்த் கிஷோரை அழைத்து வருபவர், தமிழகத்தை எப்படி வழி நடத்துவார்.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய அலை வீசுகிறது. முதலமைச்சரின் தாயார் குறித்து ஆ.ராசா இழிவாக பேசியுள்ளார். முதலமைச்சரின் தாயாக இருந்தாலும், விவசாயியின் தாயாக இருந்தாலும் தாய் தாய்தான். ஒரு தாயை பற்றி தரக்குறைவாக எப்படி பேசலாம். அவருக்கு யார் தைரியம் கொடுத்தது. ஆ.ராசாவை ஸ்டாலின் கண்டிக்கவில்லை.


நடிகை நயன்தாராவை பற்றி தவறாக பேசிய நடிகர் ராதாரவி மீது கோபப்பட்ட ஸ்டாலின், அவரை கட்சியில் இருந்து நீக்கினார்.

ஆனால், தாயை பற்றி கொச்சையாக பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?. பெண்களை தெய்வமாக வணங்கும் தமிழ் மண் இது. தி.மு.க.வை தாய்மார்கள் புறக்கணிக்க வேண்டும்” என்றார். 

Tags:    

Similar News