உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

கால்நடை வளர்ப்பவர்கள் உழவர் கடன் அட்டை பெற சிறப்பு முகாம்-வருகிற 8-ந்தேதி முதல் நடக்கிறது

Published On 2021-12-05 08:22 GMT   |   Update On 2021-12-05 08:22 GMT
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்க பரிந்துரைக்கப்படும்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்புக்கான உழவர் கடன் அட்டை பெற வருகிற 8-ந்தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. 

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாவட்டத்தில் கால்நடை வளர்ப்புக்கான உழவர் கடன் அட்டை பெற அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைமையிடங்களில் அமைந்துள்ள கால்நடை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இத்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பவர்கள் எவ்வித அடமானமும் இல்லாமல் வங்கியிலிருந்து ரூ.1.60 லட்சம் கடனாக பெறலாம்.


அதேபோல மாவட்ட பால் வளத்துறையின் முத்தரப்பு ஒப்பந்தம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு பிணையில்லாமல் ரூ.3 லட்சம் கடனாக வழங்கப்படும். இந்த 5 ஆண்டு கால கடன் அட்டையினை ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். 

இந்தக்கடன் அட்டைக்கு 7 சதவீத குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். கடன் தொகையை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டியினை விதிகளுக்குள்பட்டு மானியமாக அரசு வழங்கும்.

இந்த சிறப்பு முகாம்களில் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட உழவர் கடன் அட்டை விண்ணப்ப படிவம், பான் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் மற்றும் இரண்டு புகைப்படங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர்  தலைமையிலான குழு பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் அந்த பகுதிக்கு உட்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்க பரிந்துரைக்கப்படும். 

பொங்கலூர்  கால்நடை மருத்துவமனையில் வருகிற 8-ந்தேதியும்  காங்கயம் கால்நடை மருத்துவமனையில் 9-ந் தேதியும், குடிமங்கலம் கால்நடை மருத்துவமனையில் 10-ந் தேதியும், பல்லடம் கால்நடை மருத்துவமனையில் 13-ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

அதேபோல குண்டடம் கால்நடை மருந்தகத்தில் 14-ந் தேதியும், தாராபுரம் கால்நடை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 15-ந் தேதியும், உடுமலை கால்நடை பன்முக மருத்துவமனையில் 20-ந் தேதியும், ஊத்துக்குளி கால்நடை மருந்தகத்தில் 21-ந்தேதியும், மூலனூர் கால்நடை மருந்தகத்தில் 22-ந்தேதியும், அவிநாசி கால்நடை மருந்தகத்தில் 23-ந்ஆம் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து, வெள்ளக்கோவில் கால்நடை மருந்தகத்தில் 24-ந் தேதியும், மடத்துக்குளம் கால்நடை மருந்தகத்தில் 27-ந் தேதியும், திருப்பூர் கால்நடை பன்முக மருத்துவமனையில் 28-ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது. 

எனவே மாவட்டத்தில் கால்நடை வளர் ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News