செய்திகள்
பள்ளிக்கு வந்த மாணவிகள்

19 மாதங்களுக்கு பிறகு இன்று திறப்பு: உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்

Published On 2021-11-15 06:57 GMT   |   Update On 2021-11-15 06:57 GMT
கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இன்று காலையும் பரவலாக மழை பெய்ததால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது.
கடலூர்:

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து காணப்பட்டதால் அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதில் ஒரு கட்டமாக பள்ளி, கல்லூரிகள், சுற்றுலாத்தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

தற்போது தொற்று நோய் பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

அதன்படி கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளி சி.பி.எஸ்.இ. பள்ளி என மாவட்டம் முழுவதும் உள்ள 2,200 பள்ளிகளும் தயார் நிலையில் இருந்தன.

இந்த நிலையில் கடந்த மாதம் (அக்டோபர்) 30-ந் தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த தொடர் மழையின் காரணமாகவும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

தீபாவளி பண்டிகை முடிந்தும் மழையின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 2,200 பள்ளிகளும் திறக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இன்று காலை பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். 19 மாதங்கள் கழித்து பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளியின் நுழைவு வாயிலில் நின்று வரவேற்றனர்.

கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இன்று காலையும் பரவலாக மழை பெய்ததால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றப்பட வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அவர்களது உணவு மற்றும் குடிநீரை மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது எனவும், மேலும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags:    

Similar News