செய்திகள்
மழை

திருச்சூர், இடுக்கி, பாலக்காடு உள்பட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

Published On 2021-08-28 06:01 GMT   |   Update On 2021-08-28 07:40 GMT
கேரளாவில் நாளையும், நாளை மறுநாளும் 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருகிறது. இதனால் கேரளா முழுவதும் மழை பெய்து வருகிறது.

மேலும் மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மலையோர மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதன்காரணமாக நாளையும், நாளை மறுநாளும் கேரளாவில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் 204.4 மி.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து பாலக்காடு, திருச்சூர், திருவனந்தபுரம், இடுக்கி, பத்தினம் திட்டா, கோட்டயம், மலப்புரம், வயநாடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கன மழை பெய்யும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி மாநில வருவாய் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மலையோர மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அங்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.



இதுபோல கேரள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளனர். கடலில் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதாலும், லட்சத்தீவு பகுதியில் மோசமான காலநிலை நிலவுவதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.


Tags:    

Similar News