செய்திகள்
சென்னையில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரெயில்

சென்னையில் இருந்து ஒற்றுமை சிலைக்கு வாராந்திர சிறப்பு ரெயில் -முழு விவரம்

Published On 2021-01-17 11:22 GMT   |   Update On 2021-01-17 11:22 GMT
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஒற்றுமை சிலை அமைந்துள்ள குஜராத்தின் கேவடியா பகுதிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை:

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவடியா பகுதியில், நர்மதை ஆற்றங்கரையில் மறைந்த முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. ‘ஒற்றுமை சிலை’ என்று அழைக்கப்படும் இச்சிலை, மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது. 

இந்நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கேவடியா பகுதியுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் இன்று முதல் 8 புதிய ரெயில்கள் இயக்கப்படுகின்றன. காணொளி மூலமாக இந்த ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்தும் ஒரு ரெயில் இயக்கப்படுகிறது. 



இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், “கேவடியாவுக்கு இன்று முதல் இயக்கப்படும் புதிய ரெயில்களில் ஒன்று, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிறது. இன்று எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் என்பது கூடுதல் சிறப்பு. அவர் தனது வாழ்க்கையை ஏழைகளின் சேவைக்காக அர்ப்பணித்தவர்’ என புகழாரம் சூட்டினார்.

சென்னையில் இருந்து கேவடியாவுக்கு வாரம் ஒருமுறை சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 10.30 மணிக்கு புறப்படும் சென்னை-கேவடியா சூப்பர்பாஸ்ட் ரெயில் (09119), செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு கேவடியா சென்றடையும். 

ரெயில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளான இன்று மட்டும் காலை 11.12 மணிக்கு புறப்பட்டது. நாளை மதியம் 2.52 மணிக்கு கேவடியா சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 24ம் தேதியில் (ஞாயிறு) இருந்து வழக்கமான நேரத்தில் புறப்படும்.

இந்த ரெயில் ரேணிகுண்டா, கடப்பா, குண்டக்கல், ராய்ச்சூர், சோலாப்பூர், புனே, கல்யாண், வசாய் ரோடு, சூரத், வதோதரா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். 

இதேபோல் மறுமார்க்கத்தில், கேவடியாவில் இருந்து புதன்கிழமை தோறும் காலை 9.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (09120), வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். முதல் ரெயில், வரும் புதன்கிழமை (ஜன.20) புறப்படுகிறது. இந்த ரெயில் மேற்கண்ட நிறுத்தங்களுடன், கூடுதலாக சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்திலும் நிற்கும்.
Tags:    

Similar News