வழிபாடு
மீனாட்சி அம்மனுக்கு நவரத்தின கிரீடம் சூடி பட்டாபிஷேகம்

நவரத்தின கிரீடம் சூடி பட்டாபிஷேகம் நடந்தது: நாளை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

Published On 2022-04-13 03:03 GMT   |   Update On 2022-04-13 03:03 GMT
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரில் கண்டு தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்திருந்தனர். திருக்கல்யாணத்தை காண வரும் அனைத்து பக்தர்களும் பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சித்திரை திருவிழாவால் விழாக்கோலத்தில் மதுரை நகரம் காட்சி தருகிறது.

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டு வந்தனர்.  ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரரும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் மதுரையை ஆட்சி செய்வதாக ஐதீகம்.

உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழாவில்தான் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு முடிசூடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

இதையொட்டி நேற்று காலை தங்கப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் எழுந்தருளி கீழசித்திரை வீதி, தெற்கு ஆவணி மூலவீதி, மேலமாசி வீதி ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி காட்சி அளித்தனர். பின்னர் அங்கிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு கோவிலை அடைந்தனர்.

அதை தொடர்ந்து மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை கூறும் வகையில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழா, அம்மன் சன்னதி ஆறுகால பீடத்தில் தொடங்கியது.

முதலில் காப்பு கட்டிய விக்ரம் பட்டர் மற்றும் ஸ்தானிக பட்டர்கள் ஹலாஸ், செந்தில் ஆகியோர் பட்டாபிஷேக பூஜைகளை தொடங்கினர். அப்போது இரவு 8.30 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது.

பின்னர் மீனாட்சி அம்மனுக்கு அந்த வைர கிரீடம் சூட்டி நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோல் வழங்கப்பட்டது. அப்போது மீனாட்சி அம்மனுக்கு மீன்கொடியும் வழங்கப்பட்டது. இளஞ்சிவப்பு நிற பட்டு புடவையில் காட்சி தந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி வேப்பம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

பின்பு மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல் அம்மன் பிரதிநியாக கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்பட்டது. அவர் செங்கோலை பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் கொடுத்தார்.

அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தனர்.

மதுரையில் நேற்று  மீனாட்சியை பட்டாபிஷேக திருக்கோலத்தில் காண 4 மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இதன் மூலம் மதுரையில் நேற்று முதல் மீனாட்சி அம்மன் ஆட்சி தொடங்கியது.

பட்டத்து அரசியான மீனாட்சி அம்மன் சிவபெருமானை போருக்கு அழைக்கும் திருவிளையாடலை நினைவூட்டும் திக்கு விஜயம் இன்று மாசி வீதிகளில் நடக்கிறது. அதை தொடர்ந்து நாளை (14-ந் தேதி) மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.  இதற்கான ஏற்பாடுகள் கோவிலில் தீவிரமாக நடந்து வருகின்றன. மதுரை நகரமும், கோவிலை சுற்றி உள்ள வீதிகளும் விழாக்கோலம் பூண்டு உள்ளன.  திருக்கல்யாண மேடை மட்டும் ரூ.25 லட்சம் செலவில் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

திருக்கல்யாணத்தை பல்லாயிரக்கணக்கானோர் நேரில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் தரிசன கட்டண டிக்கெட் பெற்ற 6 ஆயிரம் பேர் வடக்கு கோபுரம் வழியாகவும், மற்ற பக்தர்கள் தெற்குகோபுரம் வழியாகவும், முக்கிய பிரமுகர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும்  அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரில் கண்டு தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்திருந்தனர். தற்போது விழா வழக்கம் போல் விமரிசையாக நடந்து வருவதால் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

திருக்கல்யாணத்தை காண வரும் அனைத்து பக்தர்களும் பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கவும் மதுரை நகரில் பல்வேறு இடங்களில் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதே போல் அழகர் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. நாளை, மாலையில் கள்ளழகர் மதுரை புறப்பாடும், அதற்கு மறுநாள் எதிர்சேவையும், 16-ந் தேதி விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளது.

இதையும் படிக்கலாம்...அஷ்டமி, நவமியில் புது முயற்சி செய்யலாமா?
Tags:    

Similar News