செய்திகள்
கைதான திரவியகுமார்.

உடுமலை அருகே மளிகைகடைக்காரர் வீட்டில் நகைகளை திருடிய வாலிபர் கைது

Published On 2021-08-04 09:12 GMT   |   Update On 2021-08-04 09:12 GMT
தனிப்படையினர் ஜெய முருகன் மளிகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை முக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜெய முருகன் (வயது 40). இவர் அங்கு மளிகைகடை வைத்துள்ளார். கடையையட்டி அவரது வீடும் உள்ளது. 

இந்தநிலையில் கடந்த 27-ந்தேதி ஜெயமுருகன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.9 லட்சம் மதிப்புள்ள 37 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த ஜெயமுருகன் இதுகுறித்து உடுமலை போலீசில் புகார் செய்தார்.  

போலீசார் விசாரணையில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மாவட்ட எஸ்.பி.சசாங் சாய், கொள்ளையர்களை பிடிக்க உடுமலை டி.எஸ்.பி. தேன்மொழிவேலுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் உடுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா தலைமையில் போலீஸ்காரர்கள் பஞ்சலிங்கம், மணிகண்டன், முத்துக்குமார், லிங்கேஸ்வரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையை அமைத்தார்.

தனிப்படையினர் ஜெய முருகன் மளிகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவரின் உருவம் பதிவாகியிருந்தது. அதனை வைத்து விசாரிக்கும் போது கொள்ளையில் ஈடுபட்டது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இட்டமொழியை சேர்ந்த திரவியகுமார்(31) என்பதும், அவர் ஜெய முருகனின் உறவினர் என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து தனிப்படை போலீசார் இட்ட மொழிக்கு விரைந்து சென்று திரவியகுமாரை கைது செய்து உடுமலைக்கு அழைத்து வந்தனர். மேலும் அவரிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து திரவியகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News